இலங்கை மேல் நீதிமன்றங்களில் பணியாற்றும் 75 நீதிபதிகளுக்கு இலங்கை அரசாங்கம் இன்று முதல் மூன்று நாட்கள் சுகபோக சுற்றுலா பயணம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
75 நீதிபதிகளுக்கு, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொண்டு விரிவுரைகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
75 நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டக்களப்பு பாசிக்குடாவில் அமைந்துள்ள அமாயா ஹொட்டலில் மூன்று நாட்கள் தங்கியிருப்பதற்காக வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் கொழும்பில் இருந்து இன்று மூன்று சொகுசு பஸ்களில் பாசிக்குடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பயணத்திற்கான செலவுகளை இலங்கை மத்திய வங்கி ஏற்றுள்ளதுடன் வர்த்தக வங்கி ஊடாக இதற்கான செலவு தொகை செலுத்தப்பட உள்ளது. அரசாங்கம் செலவிடுவதை மறைப்பதற்காகவே வங்கி ஊடாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமாயா ஹொட்டலில் நீதிபதிகளுக்கான விரிவுரை நடத்தப்பட உள்ளதுடன் முதலாவது விரிவுரையை தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் நிகழ்த்த உள்ளார். இரண்டாவது விரிவுரையை உயர்நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார நிகழ்த்த உள்ளார்.
அதேவேளை முதல் முறையாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள குற்றவாளி ஒருவர் நீதிபதிகளுக்கு விரிவுரை வழங்க உள்ளார்.
அந்த குற்றவாளி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எனவும், அவருக்கு எதிராக சில வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இவரை தவிர கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சால் பெரேராவும் நீதிபதிகளுக்கு விரிவுரை வழங்க உள்ளார்.
சுதந்திரமான நீதித்துறையை கொண்ட எந்த நாடும், இராணுவ அதிகாரிகளை கொண்டு விரிவுரைகளை நடத்துவதில்லை.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், நாட்டின் சகல துறைகளையும் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு ராஜபக்ஷவினர் பற்றி விரிவுரைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது குற்றவாளிகளையும், இராணுவத்தினரையும் பயன்படுத்தி நீதிபதிகளுக்கு விரிவுரை நடத்தப்பட உள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் இப்படியான மோசடியான செயல்கள் இலங்கையின் வரலாற்றில் என்றும் நடந்ததில்லை. இது நாட்டின் நீதிமன்ற சுதந்திரத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in