பால் கொள்முதல் விலை உயர்வு, ஏழை விவசாயிகளுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது : கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை!

ESWARANபால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகின்ற விலை கிடைக்காமல் தொடர்ந்து கஷ்டத்திலும், வேதனையாலும் வாழ்ந்து வருகின்ற ஏழை விவசாயிகளுக்கு விலை உயர்வு சிறிது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னால் வைத்த கோரிக்கையைத் தான் தமிழக அரசு பரிசீலித்து விலை உயர்வை அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகளின் சார்பாக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் உற்பத்தியாகின்ற 1 கோடியே 50 லட்சம் லிட்டரில் வெறும் 22 லட்சம் லிட்டர் மட்டும் தான் ஆவின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. 1 கோடியே 15 லட்சம் லிட்டர் தனியார் மூலமாகவும் 10 லட்சம் லிட்டர் நேரடியாக சில்லறையாகவும் விநியோகிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் கூட பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்படாமல் இருந்தால் ஆவின் கொள்முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆவின் நிறுவனத்தை இழுத்து மூடப்படுகின்ற நிலை ஏற்படும். இந்த விலை உயர்வின் மூலம் ஆவின் நிறுவன பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பிருகின்றது.

மற்ற மாநிலங்களிலெல்லாம் அரசு பால் நிறுவனங்கள் தனியார் பால் நிறுவனங்களைவிட அதிகமாக கொள்முதல் செய்வதற்கு காரணம் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலையை கொடுப்பதுதான்.

ஆவின் பாலினுடைய விநியோகம் அதிகப்படுத்தினால் தான் மக்களுக்கு நல்ல பாலை உரிய விலையில் கொடுக்க முடியும். அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஆவின் பால் விலை ஏற்றத்திற்கு பின்பும் தனியார் பால் விலையைவிட குறைவு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பால் கொள்முதல் விலை உயர்த்திய பின்னால் லிட்டருக்கு ரூபாய் 28 ஆக விற்கப்போகிறது. ஆவின் நிறுவனத்தினுடைய செலவுகளுக்கும், விநியோக செலவுகளுக்கும் 20% என்று வைத்துக் கொண்டால் 5.60 பைசா கூடும். இதை சேர்த்தால் 33.60 பைசா வரும். அரசு தற்போது 34 ரூபாய் என்று நிர்ணயம் செய்திருக்கிறது. இதை செய்யாமல் ஆவின் நிறுவனத்தை நடத்த முடியாது.

ஆவின் நிறுவனத்தினுடைய முறைகேடுகளை களைந்து நிறுவன செயல்பாடுகளின் திறமையை கூட்டினால் ஆவின் நிறுவனம் லாபத்தை ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

தனியார் பால் நிறுவனங்களும் மற்ற மாநில அரசு பால் நிறுவனங்களும் பால் விநியோகம் மட்டுமில்லாமல் பல்வேறு பொருட்களை பாலிலிருந்து தயாரிக்கிறார்கள். அதன் மூலமும் லாபம் ஈட்டுகிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் லாபத்தை அனுபவிக்கும் போது, மற்ற மாநில அரசு நிறுவனங்கள் லாபத்தை பகிர்ந்து ஊக்கத் தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கிறார்கள். இந்த நடைமுறை தமிழகத்திலும் சாத்தியம்தான்.

இவ்வாறு தனது அறிக்கையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.