சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரமங்களம் ஊராட்சியில், மாரமங்களம், பெலாக்காடு, அரங்கம், கொம்புதுக்கி உள்ளிட்ட கிராமங்களில் 4 குழந்தைகள் மையம் உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 25 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் மாரமங்களம், பெலாக்காடு, கொம்புதுக்கி ஆகிய 3 குழந்தைகள் மைய கட்டிடம் இடிந்த சுவர்களுடன், உடைந்த ஜன்னல்களுடன் படுமோசமான நிலையில் பாழடைந்து காட்சியளிக்கிறது. இதனால் இங்குள்ள குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், இந்த மாரமங்களம், பெலாக்காடு, அரங்கம், கொம்புதுக்கி உள்ளிட்ட 4 மையங்களுக்கு சரிவர ஆசிரியர்கள் பணிக்கு வருவதில்லை. அந்தந்த மைய உதவியாளர்கள் ஆசிரியர்கள் வாரத்திற்கு இருநாட்கள் மட்டும் பள்ளிக்கு வருவர் என்றும், அப்போது சமையலுக்கு தேவையான பொருட்களை கொடுத்து விட்டு செல்வர் என்றும் மீதமுள்ள நாட்களில் மையத்திற்கு வரமாட்டர்கள் என்றும் கூறுகிறார்கள்.
இது குறித்து ஏற்காடு பி.டி.ஓ துளசிராமனிடம் கேட்டபோது பாழடைந்த கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆசிரியர்கள் வராதது குறித்து மையங்களின் மேற்பார்வையாளர் அம்பிகாவிடம் கேட்டபோது, இது பற்றி தனக்கு தகவல் ஏதும் வந்ததில்லை என்றும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
-நவீன் குமார்.