இலங்கையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தை பிரதேசங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் இன்று (29.10.2014) காலை இடம்பெற்ற மண்சரிவால் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு புதையுண்டு போனது.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 300-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும், இலங்கை விமானப்படையின் விசேச ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான மருத்துவமனைகளின் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ குழு மற்றும் அவசரக்கால மருத்துவ வாகனங்களும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் பெரும் சவாலாக இருப்பதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
-எஸ்.சதிஸ்சர்மா.