இந்தியாவில் உள்ள 20 பெரிய மாநிலங்களில் சிறந்த ஆட்சி, கல்வித்துறை, விவசாயம், சுகாதாரம், உட்கட்டமைப்பு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலம் குறித்து, கடந்த 2013-2014 ம் நிதியாண்டில் “இந்தியா டுடே” பத்திரிகை நாடு முழுவதும் கள ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில் ‘State of states’ என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த துறைகளிலும் தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்துறையிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசின், மாநில உள்நாட்டு உற்பத்தி விழுக்காடு கடந்த ஓராண்டில் 3-லிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 27 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் மாற்றப்பட்டு, தமிழகத்தில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற உயர்ந்த நிலை எட்டப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வியைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டில் மட்டும் 80 ஆயிரம் மருத்துவர்கள் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். இந்திய அளவில் இது மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது. கல்வித்துறையை பொறுத்தவரை உயர் கல்விக்கு இந்திய அளவிலான ஒதுக்கீட்டைக் காட்டிலும், ஒன்று புள்ளி ஐந்து சதவீதம் தமிழகத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையின் வளர்ச்சி, மைனஸ் 13 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பின் அளவு, தமிழகத்தில் 4.74 சதவீதத்திலிருந்து, 5.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்திய மாநிலங்களுக்கிடையே மிகச்சிறந்த சாதனையாக திகழ்கிறது.
தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை படைத்துள்ளதைப் பாராட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில் ‘State of States’ அதாவது, அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலம் என்ற விருதையும், விவசாயத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாட்டிற்கு சிறப்பு விருதையும் “இந்தியா டுடே” பத்திரிகை வழங்கியுள்ளது.
இது ஜெ.ஜெயலலிதாவின் அயராத உழைப்பிற்கும், மக்கள் சேவைக்கும் கிடைத்த மகத்தான பரிசு.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in