நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு பகுதியைச் சேர்ந்தவர் கா.அ. மூர்த்தி (48). வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர். இவர் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக வன்னியர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் மேலப்பெரும்பள்ளம் காளியப்பனுடன் மாருதி காரில் 02.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை காரில் சென்று கொண்டிருந்தார்.
செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்ற போது அவரின் காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் மூர்த்தி காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்கள். இதில் நிலைகுலைந்த மூர்த்தியை மர்ம நபர்கள் அரிவாளால் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன் சென்ற காளியப்பனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மூர்த்தியின் பிணம் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அடித்து நொறுக்கினர். செம்பனார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் 2 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அகோரம் இன்று (03.11.2014) ஆலந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் பா.ம.க வேட்பாளராக இவர் போட்டியிட்டார் என்பது குறுப்பிடத்தக்கது. இதனால் பா.ம.க தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் க. அகோரம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று அறிவித்துள்ளார்.
மாநில வன்னியர் சங்க துணைத்தலைவரை, பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் ஆட்களை ஏவிவிட்டு பட்டப்பகலில் படுகொலை செய்த சம்பவம் வன்னியர்கள் மத்தியிலும், பா.ம.க. தொண்டர்கள் மத்தியிலும் பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in