சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு, கடந்த 2012-ல் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதற்கு தடை கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டிருந்தது. அந்த மனு மீதான விவாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித், ரோஹின்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு 07.11.2014 அன்று இந்த வழக்கு குறித்த இறுதி தீர்ப்பை அளித்துள்ளது.
அத்தீர்ப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதிகாரத்தை மீறிய செயல் என்றும், அத்தகைய தீர்ப்பை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரத்தை மீறி தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கு என்ன தண்டணை? அவர்களை தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை! இதற்கு மேல் ஏதாவது கேள்வி கேட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு! இது தான் நமது நாட்டு நீதிதுறையின் லட்சணம்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது, மக்களிடையே பிளவை உருவாக்கும் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசு, இந்தியாவில் வசிக்கும் மக்களிடம் சாதி சம்மந்தமாக எந்த சான்றிதழும், ஆவணமும் கேட்க கூடாது என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமா?
இந்தியாவில் தமிழ்நாட்டை விட, பிற மாநிலங்களில் தான் சாதியின் தாக்கமும், ஆதிக்கமும் அதிகளவில் இருந்து வருகிறது. அதனால் தான் தங்கள் பெயருக்கு பின்னால் ரெட்டி, நாயுடு, மேனன், நாயர், கௌடா, ஜோஷி, மோதி, திரிவேதி, சதுர்வேதி, முகர்ஜி, பட்நாயக், யாதவ்… இப்படி பெயரிலேயே சாதியை சேர்த்து பகிரங்கமாக அழைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
அவ்வளவு ஏன்? நம் நாட்டின் உயர்ந்த அமைப்பான நீதிதுறையில் பணியாற்றும் பல நீதிபதிகள் கூட, தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை பயன்படுத்துகிறார்களே? இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன பதில் சொல்ல போகிறது?
இதையெல்லாம் பார்க்கும் போது ‘அழுக்கைப் போக்க சோப்பு! ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு’ என்ற கருத்துத்தான் என் நினைவுக்கு வருகிறது.
நமது இந்தியா சாதி, சமய, இனம்,மொழி பேதமற்ற சமத்துவ நாடு.
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்.
ஏழையென்றும்
அடிமையென்றும்
எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பார்
இந்தியாவில் இல்லையே
என்றார் மகாகவி பாரதி.
வேதங்கள் ஓதும் பார்ப்பானின்
செயலைவிடவும் மேன்மையானது
ஒரு செருப்பு தைப்பவனின் படைப்பு
என்றார் வீரத்துறவி விவேகானந்தர்.
மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், உண்மையிலுமே இன்று இந்தியா இப்படிதான் இருக்கிறதா?
பகுத்தறிவு பற்றி பேசும் தலைவர்கள் கூட, தேர்தல் சமயங்களில் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேடி பிடித்து நிறுத்தும் கொடுமை இந்தியாவில் மட்டும்தான் இன்னும் இருக்கிறது.
இன்னும் சொல்ல போனால் வாக்காளர் அடையாள அட்டைகளிலும், குடும்ப அட்டைகளிலும் அனைத்து சாதிகளையும் குறிப்பிட்டு தெரு பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிவான்களுக்கு தெரியுமா? தெரியாதா?
இந்நாட்டில் திருக்குவளை இருந்தென்ன பிரயோசனம்? இன்னும் கிராமப்புற தேனீர் கடைகளில் இரு குவளை இருக்கிறதே? இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிவான்கள்?
“தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்” என்று ஏட்டளவில் எழுதி வைப்பதும், சர்க்கரை என்று பேப்பரில் எழுதி நக்குவதும் என்னை பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.
சாதி வாரி கணக்கெடுப்பை சட்டம் போட்டு தடுத்து விடுவதால், இந்தியாவில் சமத்துவம் நிலவி விடாது. மாற்றம் என்பது ஏட்டளவில் இருந்து எந்த பயனுமில்லை. ஒவ்வொரு இந்தியனின் மனதளவில் மாற்றம் வரவேண்டும்.
அதுவரை இது போன்ற தீர்ப்புகள் கனல் நெருப்பை காகிதத்தில் சுற்றும் முயற்சியாகதான் இருக்கும்.
இந்தியாவில் ஒருவேளை ஊழலை ஒழித்தாலும் ஒழிக்கலாமே தவிர! ஒரு காலத்திலும் சாதியை ஒழிக்க முடியாது.
ஏனென்றால், அரசாங்கம் மக்களுக்கு சாதி வாரியாக சலுகைகள் வழங்கும் வரை, சாதி வாரி கணக்கெடுப்பு என்ற கோரிக்கையும் எழுந்து கொண்டே தான் இருக்கும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர் துரைபெஞ்சமின்,
ஆசிரியர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in