இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா கடுமையாக விமர்சித்துள்ளார். நீதிமன்றத்தின் கருணை காரணமாக மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1979-ம் ஆண்டு கலவானை தொகுதி இடைத் தேர்தலின் போது சரத் முத்தெட்டுவேகம சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்புக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்காக அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது. எனினும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கருணை காரணமாக அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
அதே போன்று 1983-ம் ஆண்டு பெலியத்தைத் தொகுதி இடைத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மூவர் மீது மஹிந்த ராஜபக்ஷ துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இந்தச் சம்பவத்திலும் நீதிமன்றத்தின் கருணை மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக அமைந்தது. எனினும் அவர் ஒரு கொலைகாரன் என்ற விடயம் மட்டும் இன்றளவும் மக்கள் மனங்களில் இருந்து மாறவில்லை.
அதேபோன்று “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” விவகாரத்தில் அவர் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குறித்து தன்மீது அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் நீதிமன்றத்தின் கருணை காரணமாக மஹிந்தவுக்கு சாதகமான முறையில் தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது. எனினும் அவர் கொள்ளைக்காரன் என்பது உண்மை. அதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்த வகையில் மஹிந்தவின் ஆரம்பம் கொலை, கொள்ளை என்பதாகத் தான் இருந்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை இன்னொரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் தற்போது குற்றுயிரும், குலையுயிருமாக போராடும் ஜனநாயகம் முழுமையாக செத்துவிடும் என்று சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
1999 -ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இலங்கையில் தலைமை நீதிபதியாக பதவியில் இருந்தவர் சரத் என்.சில்வா. இந்தக் கால கட்டத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளையும் வழங்கியவர்.
இவர் மனது வைத்திருந்தால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தடம் தெரியாமல் அழித்து இருக்கலாம். ஆனால், நீதித்துறையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் விட்டதற்காக, இப்போது இலங்கை மக்களிடம் பொதுமன்னிப்புக் கோரியிருக்கிறார்.
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சுனாமி இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைப் புரட்டிப் போட்டது. இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்தது. பல்லாயிரக்கணக்கானோரை வீடுகளின்றி நிர்க்கதியாக்கியது இயற்கை ஆடிய கோரத் தாண்டவத்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் குவிந்தன.
அரசாங்கமும் உதவியது, அரசுசார்பற்ற நிறுவனங்களும் உதவின. தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் உதவ முன்வந்தனர்.
இந்த நிவாரணப் பணியை எந்த இலாப நோக்கமும் இன்றி முன்னெடுத்தவர்களும், முன்னெடுத்த நிறுவனங்களும் இருந்தன. தமது இலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, தம்மை வளப்படுத்திக் கொண்டு கொழுத்தவர்களும் உண்டு.
அரசாங்கத்தின் சார்பிலும் பல்வேறு நிதியங்களின் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு இலங்கை பிரதமர் நிவாரண நிதிக்குத் திரட்டப்பட்ட 82 மில்லியன் ரூபாய் “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” என்ற பெயரில் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது.
அப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரே அந்த நிதியத்துக்குப் பொறுப்பாக இருந்தவர். தவறு என்னவெனில், அரசு கணக்கில் அந்தப் பணம் போடப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் பெயருக்கே இந்த நிதி மாற்றப்பட்டது. இது குறித்து விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை.
அதற்குள் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாகி விட்டார். இந்த வழக்கை விசாரித்தவர்தான் இந்த சரத் என் சில்வா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in