கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ம.தி.மு.க போட்டியிட்டது. இந்தியா முழுவதும் அடித்த மோதி அலை! தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு முன்னால் செயல் இழந்துப் போனது. இதனால் கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ 261143 வாக்குகள் மட்டுமே பெற்று, இரண்டாம் இடத்தைப் பெற்றார். இந்நிலையில், பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை, நரேந்திர மோதி தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததை வைகோ கண்டித்தார். டெல்லி வரை சென்று கருப்பு கொடி ஏந்தி தன் கண்டணத்தைத் தெரிவித்தார். இதன்பிறகு இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்லும் போதெல்லாம் மத்திய அரசை வைகோ வறுத்தெடுத்தார். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐவரை மீட்க மகிந்த ராஜபக்சவுடன், நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியதை நாடகம் என்று வைகோ வர்ணித்தார். இலங்கைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெ.ஜெயலலிதாவுக்கு வரலாறு மகுடம் சூட்டும் என்று புகழும் வைகோ, மீனவர்களை காப்பாற்றியதற்காக பா.ஜ.க.வுக்கு நன்றி கூட சொல்லவில்லையே என்ற ஆதங்கம் பா.ஜ.க தலைவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 60 வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு வைகோ திட்டமிட்டு இருந்தார். இதை அறிந்த சுப்பிரமணியன் சுவாமி, வைகோவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆவேசமாக அறிக்கை விட்டார். இந்நிலையில் 28.11.2014 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வைகோவுக்கு ஒரு தகவல் என்ற பெயரில் செய்தி ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து உங்களை தூக்கி எறிவதற்குள் வெளியேறி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், வைகோ ஊடகங்கள் முன்னிலையில் “பிரதமர் மோதியை பற்றியோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது” என்றும், வைகோவின் நாக்கை அடக்க பா.ஜ.க தொண்டனுக்கு தெரியும் என்றும், பா.ஜ.க பொதுச்செயலாளர் எச்.ராஜா பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்கு பின்னணியில் சுப்ரமணியன் சுவாமியின் சூழ்ச்சி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விசயத்தில் தேவையில்லாமல் தமிழக அரசையும், ஜெ.ஜெயலலிதாவையும், சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். சுப்ரமணியன் சுவாமியின் சொல்படிதான், பிரதமர் நரேந்திர மோதியே செயல்படுகிறார். அப்படி இருக்கும் போது, வைகோவால் அக்கூட்டணியில் எப்படி நீடிக்க முடியும்? கடந்த ஆறு மாத காலமாக அவமானம் பட்டதுதான் மிச்சம். இதனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வைகோ மிக விரைவில் வெளியேறுவார் என்று தெரிகிறது. -டாக்டர் துரைபெஞ்சமின். |