ஜோதிடம் உண்மையா? பொய்யா? இதை எந்த அளவுக்கு நம்பலாம்? இந்த கேள்வியே தேவையில்லை. ஏனென்றால், ‘ஜோதிடம்’ முழுமையான அறிவியல் இதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.
ஒருவருடைய ஜாதகம் என்பது அவர் பிறந்தபோது ஒன்பது கிரகங்கள் இருந்த ராசிகள், ஒன்றுக்கொன்று எந்த விதமான தொடர்பில் இருக்கின்றன, பலம், பலமின்மை, மறைவிடங்கள் அல்லது அசுபமான இடங்கள் மற்றும் கிரகங்களின் பார்வைகள்… போன்றவற்றுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருக்கின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட ஜோதிட நூல்களே இதற்கு ஆதாரங்கள். ஒருவருடைய ஜாதகப்படி கிரகங்கள் நன்மையோ அல்லது தீமையோ செய்தே தீரும்.
“ஜோதிஷ்” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லே ஜோதிடம் ஆகும். “ஜோதிஷ்” என்றால் ஒளி அல்லது வெளிச்சம் என்று பொருள்.
இருளில் பாதை தெரியாத ஒருவருக்கு, எந்த திசையில் செல்வது என்று சரியான வழிகாட்டுவதே ஜோதிடம் ஆகும். இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.
நம்மை பொருத்தவரை நாத்திகம் கூட நல்ல மதம்தான்! மற்றவர்களின் நம்பிக்கைகளை சீர்குழைக்காதவரை! இப்போது நாம் எழுத வந்தது இது அல்ல பிரச்சனை!
‘விகடன்’ இணைய ஊடகம், சனிப் பெயர்ச்சியால் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், இந்தியாவிற்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து, மாயவரத்தைச் சேர்ந்த ஜோதிடர் எஸ். ரமேஷ் சுவாமி என்பவர் கணித்திருப்பதாக, 04.12.2014 அன்று ‘சனிப்பெயர்ச்சி ஜா(சா)தகம்!’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோதி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோரின் ஜாதகத்தை கணித்து கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள்.
அவர்கள் அதில் தெரிவித்திருந்த பலன்களைப் பற்றியும், நான் விமர்சனம் செய்ய வரவில்லை. ஏனென்றால், அதை விமர்சனம் செய்யும் அளவிற்கு அதில் எந்த உண்மையும் இல்லை.
வியாபாரத்திற்காகவும், வெறும் பரப்பரப்பிற்காகவும் வெளியிடப்பட்ட கட்டுரை என்பது ஜோதிடம் அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.
அதில் பெரிய கொடுமை என்னவென்றால், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு நட்சத்திரம்: ரிஷபம் என்றும், ராசி: கார்த்திகை என்றும், அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ரிஷபம்: ராசியா, நட்சத்திரமா? கார்த்திகை: நட்சத்திரமா, ராசியா? இதை எழுதியவர் முட்டாளா? இதைப் பரிசீலிக்காமல் வெளியிட்டவர் முட்டாளா? அல்லது இதைப் படிக்கும் வாசகர்கள் முட்டாள்களா? இதற்கு ‘விகடன்’ நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்.
இங்கு நான் வெளியிட்டு இருக்கும் கீழ்காணும் குறிப்புக்களைப் பார்த்தாலே இதற்கு விடைக் கிடைத்துவிடும்.
ரிஷபம் என்பது ராசி, கார்த்திகை என்பது நட்சத்திரம், (கார்த்திகை நட்சத்திரத்தை கிருத்திகை என்றும் குறிப்பிடலாம்) இந்த அடிப்படைஜோதிட அறிவு கூட இல்லாமல், இந்திய தேசத்தைப் பற்றியும், பிரபல அரசியல் தலைவர்களின் எதிர்காலம் பற்றியும் ஜாதகம் கணித்து இருக்கிறார்கள் என்றால், இவர்களை என்ன செய்வது?
இதையெல்லாம் பார்க்கும் போது, இந்தக் கட்டுரையை எழுதியவருக்கும், இதை வெளிட்டவருக்கும்தான் ஏழரைச் சனிக் காலம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
வதந்திகளைச் செய்திகளாக்கி வருமானம் பார்ப்பதும், பொய்களை விற்று பிழைப்பு நடத்துவதும் ‘விகடன்’ நிர்வாகத்திற்கு வாடிக்கையாகி விட்டது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in