திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 61-ல், ஆயில்மில் பஸ் நிறுத்தம் அருகில், புகழ்நகரில், தேவேந்திர குல வேளாளர் திருமண்டபம் எதிர்புறம், அரசுக்கு சொந்தமான சமுதாயக்கூடம் மற்றும் உயர்நிலை தண்ணீர் தொட்டி இருக்கிறது.
அந்த பகுதி முழுவதும் பயன்பாடும், பராமரிப்பும் இல்லாததால் சுகாதாரச் சீர்கேடு அடைந்து மிகவும் மோசமான சூழ்நிலையில், நோய்பரப்பும் இடமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் இருக்கிறது.
மேலும், சமுதாயக்கூடத்தைச் சுற்றி வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளனர்.
அப்பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான காலியிடத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்கள் அபகரிக்க தயாராகி வருவதாக தெரிகிறது.
எனவே, மேற்படி இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளையும், சாக்கடை மற்றும் குப்பைகளையும் அகற்றி, சமுதாயக்கூடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து, அரசாங்க இடத்தை பாதுகாக்க வேண்டும்.
போர்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-கே.பி.சுகுமார்.