பத்திரிகையாளர் பாலசுப்ரமணியன் மறைவு: இதழியல் துறைக்கு மிகப் பெரிய இழப்பு!

விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன்.

விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன்.

சென்னையில் மாரடைப்பால் காலமான மூத்த பத்திரிகையாளரும், பதிப்பாளரும் மற்றும் விகடன் குழுமத்தின் தலைவருமான பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு, எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1986 ஆம் ஆண்டு, திருச்சி புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நான் 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, அப்போது எங்கள் ஊரில் உள்ள வறுமையில் வாழ்ந்த விதவை தாய்மார் ஒருவர், தனது மகள் திருமணத்திற்காக, தமிழக அரசின் விதவைகள் மகள் திருமண உதவித் திட்டத்திற்கு, திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்பே, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அத்திட்டத்தில் ரூ.2000 ஆயிரம் வழங்கி வந்தார்கள்.  

மாவட்ட ஆட்சியரிடமிருந்து, திருச்சி தாலுக்கா அலுவலகத்திற்கு மனு வந்து சேர்ந்து விட்டது. ஆனால், ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த பெண்ணுக்கு அந்த உதவித் தொகை வந்து சேரவில்லை.

 இதை நம்பி அவர் வேலை செய்யும் முதலாளியிடம் மகள் திருமணத்திற்காக அந்த பெண் கடன் வாங்கியிருந்தார். அரசாங்கம் உதவிப் பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், அவரது முதலாளிக்கும், அந்த பெண்ணுக்கும் மனவருத்தம் வந்து விட்டது. இதை என் அம்மாவிடம் சொல்லி, அந்த பெண் அழுது புலம்பிக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட நான், 35 பைசாவிற்கு ஒரு  inland letter வாங்கி, மேற்படி விபரங்களை அக்கடிதத்தில் குறிப்பிட்டு, விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.

10 தினங்களுக்கு  பிறகு விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனிடம் இருந்து, எனக்கு ஒரு  கடிதம் வந்தது.

தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். கடிதத்தில் தாங்கள் குறிப்பிட்டப் பிரச்சனையை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த 15 தினங்களில், சமூக நலத்துறையில் இருந்து அதிகாரிகள் நேரில் வந்து, அந்த பெண்ணிடம் ரூ.2000 ஆயிரம் பணத்தை ரொக்கமாக வழங்கி கையெழுத்து வாங்கிச் சென்றார்கள்.

இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், எதை செய்தியாக்க வேண்டும். எதை செயலாக்க வேண்டும் என்பதை ஒரு பத்திரிகையாளர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் தன் இதழியல் பணியில் ஈடுப்பாட்டுடன் செய்து வந்தார்.

மேலும், நாட்டில் புயல், மழை, வெள்ளம், பூகம்பம்… இப்படி இயற்கைச் சீற்றங்கள் எது நடந்தாலும், உடனே வாசகர்களிடமிருந்து நிதியை திரட்டி, நிதி அளித்தவர்களின் பெயர் பட்டியலை இதழ்களில் பிரசுரம் செய்து, ஒரு ரூபாய் கூட குறையாமல், தன் பங்குக்கும் ஏதாவது சேர்த்து, முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு, அரசியல் பேதம் பார்க்காமல், வாசகர்களின் சார்பில் தானே நேரில் சென்று அளிப்பார்.

முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி வழங்கிய போது.

முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி வழங்கிய போது.

இந்த தேசத்தையும், தன் தேகத்தையும் ஒன்றாகவே அவர் கருதினார். இறந்தும் உயிர் வாழ வேண்டும் என்பதற்காகதான், தன் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்காக  அர்பணித்தார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளுடன், ஜெ.ஜெயலலிதா சேர்ந்து இருப்பது போன்ற ஒரு பொய்யானப் புகைப்படத்தை, ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், ஒரே நேரத்தில் அனைத்து பத்திரிகை அலுவலங்களுக்கும் அனுப்பி வைத்தபோது, அதை உண்மை என்று நம்பி அனைத்து பத்திரிகைகளும் வெளியிட்டன. அந்த புகைப்படத்தை விகடன் நிர்வாகமும் வெளியிட்டது.

அதைக் கண்ட அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா,  அதிர்ச்சி அடையவில்லை. ஆத்திரமும் கொள்ளவில்லை. பத்திரிகைகளில் புகைப்படம் வெளிவந்த 12 மணி நேரத்திற்குள், அப்புகைப்படத்தில் தன்னோடு இருப்பவர்கள், ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் அல்ல. கர்நாடகா மாநிலத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. கட்சி பொறுப்பாளர்கள் என்பதை அவர்களை உயிரோடு கொண்டு வந்து நிறுத்தி, அனைத்து பத்திரிகை நிறுவனங்களுக்கும் பதிலடிக் கொடுத்தார்.

அப்போது, ஜெ.ஜெயலலிதாவின் வீடு தேடிச் சென்று விகடன் நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஜெ.ஜெயலலிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதோடு நில்லாமல், ‘நாங்கள் முட்டாளக்கப்பட்டோம்’ என்ற தலைப்பில் விகடன் இதழ்களில் பலமுறை எழுத்துப் பூர்வமாக வருத்தம் தெரிவித்தார்.

விகடன் நிர்வாகத்தில் தான் ஆசிரியராக இருக்கும்வரை, இதழியல் தர்மத்தை தன் இரு கண்ணாக  கருதி காப்பாற்றி வந்தார்.

அவரது மகன் பா.சீனிவாசன் தலையெடுத்தப் பிறகு, அவரது குடும்ப அளவில் மட்டுமல்ல, விகடன் குழுமத்தின் நிர்வாக அளவிலும் மற்றும் கொள்கை அளவிலும் பெரிய மாற்றங்கள் உருவாகியது.

அந்த மாற்றங்கள் அனைத்தும், பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தது. அதனால், அந்த பாவங்களுக்கும், பலி சொல்லுக்கும், தான் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக, தன் இதழியல் பணியை குறைத்து கொண்டார் என்று சொல்வதை விட, நிறுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். இது அவர் விரும்பி எடுத்த முடிவல்ல! வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு!

ஒரு ஊடக நிர்வாகம் எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு பாலசுப்ரமணியனும், ஒரு ஊடக  நிர்வாகம் எப்படி  இருக்க கூடாது என்பதற்கு அவரது மகன் பா.சீனிவாசனும் மிக சிறந்த  உதாரணம்.

பாலசுப்ரமணியன் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், அவர் வகுத்த கொள்கையில் விகடன் நிர்வாகம் இன்று முதல் பயணிக்க வேண்டும்…! அதுதான் பா.சீனிவாசன், அவரது தந்தை பாலசுப்ரமணியன் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய பரிகாரம்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in