கர்நாடக மாநிலம் ஹீல்சூரில் உள்ள ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளையின் தலைவராக இருந்த காசிநாத் என்பவரை, பதவி காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக காசிநாத் புகார் கூறினார்.
ஆனால், ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம் செலுத்துமாறு அறக்கட்டளை நிர்வாகிகள் மிரட்டினார்கள். இதையடுத்து 2000–ம் ஆண்டில் காசிநாத் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 14 ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பு வழங்கவில்லை.
விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டுமென்றால், ரூ.5 லட்சம் லஞ்சம் வேண்டும் என்று பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காசிநாத், இதுபற்றி உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
கடந்த 23.12.2014 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ரூ.5 லட்சம் பணத்துடன் பீதர் பசவண்ணா சிலை அருகே காசிநாத் காத்திருந்தார். அப்போது பணத்தை வாங்கிய நீதிபதி சரவணப்பாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதி சரவணப்பா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதை ஐகோர்ட்டு பதிவாளர் பி.ஏ.பாட்டீல் உறுதி செய்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். லஞ்சம் பெறும்போது உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒத்துக்கொண்டுள்ளார். அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
-சி.மகேந்திரன்.