சேலம், ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன், நேற்று கோலாகலமாக துவங்கியது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி துவங்கப்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தையொட்டி இரண்டாம் பருவ மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நேற்று ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி துவங்கியது. நண்பகல் 12 மணிக்கு குதிரைகள் அணிவகுப்புடன், நாதஸ்வரம், தவில், நையாண்டி மேளம், கரகாட்டம், கோல்கால் ஆட்டம், தப்பாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் படகு துறையில் இருந்து ஊர்வலம் துவங்கியது.
சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கிராமிய கலைஞர்களுடன், ஊர்வலமாக அண்ணா பூங்காவுக்கு சென்று மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். மலர் கண்காட்சியின் நுழைவு வாயிலில் 10 அடி உயரம் 15 அடி நீளம் அஸ்பராகஸ் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு அழகிய யானை வடிவமைக்கப்பட்டிருந்தது.
பூங்காவுக்குள் ரோஜா, பாலசம், சோலியஸ், ஜெனியா, ஃபிளாக்ஸ், உள்ளிட்ட 45 உள்ளுர் மலர்களை கொண்டு பல்வேறு அழகிய வடிவமைப்புகளில் பூக்கள் அமைக்கப்பட்டிருந்தது. பூங்காவில் 8 அடி உயரம், 12 அடி நீளம், 15 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு, ஏற்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற காட்டெருமை உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சேலம் மட்டும் அல்லாமல் பெங்களுர், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சென்னை, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இரண்டாம் பருவ மலர் கண்காட்சியை காண்பதற்கு ஏற்காட்டில் குவிந்தனர்.
ஏற்காடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார்ஈடுப்பட்டிருந்தனர். மலர் கண்காட்சியை காண வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில். படகு துறை, உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர்.
கண்காட்சியை திறந்து வைத்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 3-வது ஆண்டாக ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் 48 வகையான மலர்கள் இரண்டு இலட்சம் உள்ளூர் மலர்கள் இடம் பெற்றுள்ளது. 5 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டை ஊட்டியை போல் மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக இதைப்போன்ற மலர் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இதை கண்டு களிக்கலாம். இவ்வாறு கூறினார்.
-நவீன் குமார்.