தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட, சாகுபுரம் என்ற பகுதியில் DCW- தாரங்கத்தாரா இரசாயனத் தொழிற்சாலை (Dharangadhara Chemical Works Limited) நீண்ட காலமாக இயங்கி வருகிறது.
இங்கு Industrial Grade Salt, Caustic Soda, Liquid Chlorine, Hydrochloric Acid, Trichloro Ethylene, Synthetic Rutile (Beneficiated Ilmenite), Ferric Chloride, Yellow Iron Oxide, PVC Resin ஆகிய பொருட்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன.
இரசாயனத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் காற்றும், நீரும் மாசு அடைந்து, அப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், கால்நடை மற்றும் உயிரினங்களுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், புற்றுநோயின் தாக்கம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
இதுப்போன்ற புகாரின் அடிப்படையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 –ந்தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (தீர்மானம் எண்: 420), இத்தீர்மானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் 09.01.2013 அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 28.01.2013 அன்று, இதற்கு பதிலும் அனுப்பியுள்ளது. ஆனால், பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் காயல்பட்டினத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுக்காப்பு கழகம் என்ற அமைப்பின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 02.07.2013 அன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆஷிஷ் குமார், 07.08.2013 அன்று இப்புகார் குறித்து உரிய விசாரணைச் செய்து நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட சுகாதார இணை இயக்குநருக்கும், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கும், கடிதம் அனுப்பினார். ஆனால், இன்று வரை இப்பிரச்சனை தீரவில்லை.
இந்நிலையில் மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலையை இழுத்து மூடக் கோரியும், ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரியும், சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில், ஆலையை முற்றுகையிடும் போராட்டம் 30.12.2014 அன்று காயல்பட்டினத்தில் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பு தலைவர் மவ்லவீ அஷ்ரஃப் அலீ ஃபைஜீ தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அறிமுக உரையாற்றினார்.
‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், அதன் நிர்வாகி முகிலன், எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவீ, கூடங்குளம் போராட்டக் குழு மகளிரணி நிர்வாகி சுந்தரம்மாள், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் DCW ஆலைக்கெதிராக கண்டன உரையாற்றினர். மேலும் 700-க்கும் மேற்பட்டோர் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர்.
–பி.கணேசன் @ இசக்கி, கே.பி.சுகுமார்.