தேர்தல் நடத்தை விதியை மீறிய வழக்கில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நரேந்திரமோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சராக இருப்பவர் முக்தர் அப்பாஸ் நக்வி.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, முக்தர் அப்பாஸ் நக்வியின் கார் பரிசோதனைக்காக காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முக்தர் அப்பாஸ் நக்வியின் ஆதரவாளர்கள் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களிடையே பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முக்தர் அப்பாஸ் நக்வி மீது சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி மணிஸ்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில், இந்த வழக்கில் முக்தர் அப்பாஸ் நக்வி உள்பட 19 பேர் குற்றவாளிகள் என்றும், முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கைது செய்யப்பட்ட முக்தர் அப்பாஸ் நக்விக்கு, உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
-ப. விக்னேஸ்வரன்.