கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு குஜராத் மாநிலத்தில் உள்ள போர்ப்பந்தர் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பாகிஸ்தான் படகு வெடித்து சிதறியது.
படகில் இருந்த 4 பேரும் தற்கொலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம், கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி நடைபெற்ற மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்துவதற்காக வந்திருக்கலாம் என்று புலனாய்வு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தீவிரவாத படகை தகருங்கள், அவர்களுக்கு நாம் பிரியாணி வழங்கி சேவை செய்ய வேண்டாம் என்று கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி உத்தரவிட்டார் என்று செய்தி வெளியாகியது.
இந்நிலையில், நீங்கள் டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற சம்பவத்தை மனதில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் பாகிஸ்தானை வெடிக்க செய்தோம். நாங்கள் அவர்களை வெடிக்க செய்தோம். நான் காந்திநகரில் இருந்தேன் மற்றும் படகை தகர்க்க செய்ய உத்தரவிட்டேன். நாம் அவர்களுக்கு பிரியாணி வழங்கி சேவை செய்ய வேண்டாம் என்று சீருடையில் இருந்த கடலோர காவல்படை அதிகாரி பேசியதாக வீடியோ தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் அரசின் கூற்றுக்கும், தற்போது வெளியாகிய தகவலுக்கும் இடையே பெரும் முரண்பாடு காணப்பட்டது.
இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையிலும் கடலோர காவல்படை அதிகாரி, தான் உத்தரவிட்டதாக வந்த தகவலை மறுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட செய்தித்தாள் நிறுவனம் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் பேசுகையில், தேவைப்பட்டால் கடலோர காவல்படை டி.ஐ.ஜி.க்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விசாரிக்கப்படும். பாதுகாப்பு துறை தனது முந்தைய நிலைபாட்டிலே உள்ளது. அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை புகார் தெரிவித்தால், நான் வீடியோவை எடுத்து விசாரணை நடத்த கூறுவேன். என்னுடைய நிலையில் மாற்றம் இல்லை. தேவைப்பட்டால் அதிகாரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பேன். இந்தியாவில் சுமார் 15 முதல் 16 லட்சம் வரையிலான பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர், யாராவது தவறான அறிக்கையை வெளிப்படுத்தினால் அதற்கு அரசு பொறுப்பு இல்லை என்று பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார்.
-எஸ்.சதீஸ் சர்மா.