ஆளுநர் பதவி : அதிகாரப் பகிர்வா?  ஊழல் பகிர்வா?ஆளுநர் பதவிக்கு ஏற்பட்ட அவமானம்!

மத்திய பிரதேச மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவுடன், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.

மத்திய பிரதேச மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவுடன், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

அம்மாநிலத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் யாதவ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வனக் காவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க  அம்மாநில அரசு வேலைவாய்ப்பு தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

Madhya Pradesh Professional Examination Board  ofice Madhya Pradesh Professional Examination Board

அந்த தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியானது. 

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, அரசு    வேலைவாய்ப்பு தேர்வு வாரிய ஊழியர்களில் பலர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தேர்வு வாரிய ஊழியர் நிதீன் மொகிந்திரா என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசின் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் இந்த முறைகேட்டில் முக்கியப் பங்கு வகித்து  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் சிறப்பு அதிகாரி தன்ராஜ் யாதவ் கைதானார். அதன் பிறகே இந்த முறைகேடு தொடர்பான முழு விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தது.

வனக் காவலர் தேர்வு முறை கேட்டில் மத்திய பிரதேச மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை சிறப்பு அதிரடிப் படையினர் வெளியிட்டனர்.

ஆளுநர் ஊழல் செய்து  இருப்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இதனால்தான் சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஆளுநர் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக   ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 (மோசடி), 120பி (கிரிமினல் சதி) ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 பிரிவுகள் தவிர, மேலும் சில உட்பிரிவுகளிலும் வழக்கு தொடர சிறப்பு அதிரடிப்படை போலீசார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ் ஹன்வில்கர்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ் ஹன்வில்கர்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் அராத்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் அராத்.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆளுநர் என்பதால், குடியரசு தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்று, இந்த வழக்கு குறித்து  விசாரணை செய்த, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ் ஹன்வில்கர் மற்றும் நீதிபதி அலோக் அராத் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்வு வாரிய முறைகேட்டில் உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால், உடனே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர் ராம்நரேஷ் யாதவிடம் கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, ராம்நரேஷ் யாதவ் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1928 ஆம் ஆண்டு  ஜீலை மாதம் 1 ந்தேதி காயா பிரசாத், பகவதி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்த ராம்நரேஷ் யாதவ், 1949 ஆம் ஆண்டு அனரி தேவி @ சாந்தி தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர்.

மத்திய பிரதேச ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ராம்நரேஷ் யாதவ்.

மத்திய பிரதேச ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ராம்நரேஷ் யாதவ்.

2011 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 8 ந்தேதி மத்திய பிரதேச ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ராம்நரேஷ் யாதவ், தனது 87 -வது வயதில் வனக் காவலர் தேர்வு முறை கேட்டில் ஈடுப்பட்டு, ஆளுநர்  பதவிக்கு அவமானத்தை தேடி தந்துள்ளார்.

குடியரசு தலைவரை இந்தியாவின் முதல் குடிமகன் என்றும், மாநில ஆளுனர்களை அந்த அந்த  மாநிலத்தின் முதல் குடிமகன் என்றும், இந்திய மக்களாகிய நாம் மதிப்பளித்து மரியாதை செலுத்தி வருகின்றோம்.

ஆனால், அந்த உயர்ந்த பதவிகளில் இருந்தவர்களில் மற்றும் இருப்பவர்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர, மற்ற அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்! உள்ளாகி வருகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது.

ஆளுனர்களில் பெரும்பாலானோர் வயதில் தான் பெரியவர்களாக இருக்கிறார்களே தவிர, சொல்லிலும், செயலிலும், கடமைகளிலிலும் சின்னப் புத்தி உள்ளவர்களாகதான் இருக்கிறார்கள்.

அதனால்தான் ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடி போல என்று அறிஞர் அண்ணா சொல்லி இருப்பாரோ? மத்தியில் ஆளுகின்றவர்களுக்கு மட்டும் விசுவாசமாக இருப்பதால்தான் இவர்கள் வகிக்கும் பதவிக்கு ஆளுநர் என்று பெயர் வைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்கள், அரசியலில் ஓய்வுப் பெற்றவர்கள் மற்றும் அரசியலில் அனாதை ஆக்கப்பட்டவர்கள் இதுப்போன்ற நபர்களைதான் ஆளுநர்களாக நியமிக்கிறார்கள். இவர்களால் நாட்டிற்கு என்ன பிரயோசனம்? இவர்களுக்கு வழங்கப்படும் வண்டி, வாகனம், பாதுகாப்பு, சம்பளம் மற்றும் வசிப்பதற்கான மாட மாளிகை இவர்கள் வாழும் போதும், இவர்கள் வாழ்க்கைக்கு பிறகும் வழங்கப்படும் பணபரிபாலன்கள்… அப்பப்பா இதனால், மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது.

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால், எந்த மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார்களோ, அந்த மாநில மக்களின் தாய் மொழி தெரியாதவர்களாகதான் பெரும்பாலும் ஆளுநராக இருக்கிறார்கள்.

எந்த மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், எந்த மாநிலத்தில் ஆளுநராக ஆக போகிறார்களோ, அந்த மாநில மக்களின் தாய்மொழியில் பேசவும், வாசிக்கவும் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்போது தான் மாநில மக்களின் உணர்வுகளையும், உண்மையான பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு ஒரே தீர்வு, ஆளுநர் பதவியை தேர்தல் மூலமாக மக்களே வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே, மாநில ஆளுநர் ஆக முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். அதற்கு ஏற்றார் போல் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in