இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை பயணத் திட்டம்!- இலங்கை வெளிவிவகார அமைச்சகம் அறிவிப்பு!

narendra_modiministry-of-external-affairs-sri-lankaUntitled

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுடுவதில் தவறில்லை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர் எதிர்வரும் 13-ம் தேதி இலங்கையை வந்தடைவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, அவர் செல்லும் இடங்கள் தொடர்பான பயணத்திட்டத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அநுராதபுரத்திலுள்ள மஹா போதி புனித ஸ்தலத்துக்கு செல்லவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள யாழ்.கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன், இந்திய உதவியில் கட்டப்படவுள்ள வீடுகளை அதற்குரிய பயனாளிகளுக்கு ஒப்படைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாருக்கும், மதவாச்சிக்கும் இடையிலான இரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை குறிப்புணர்த்தும் வகையில், அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளும் முதல் இரயிலை கொடியசைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைக்கவுள்ளார்.

மேலும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்துவதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார் என, இலங்கை வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் கடந்த 1988-ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட, இந்திய இராணுவத்தினருக்கு, கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்துவார்.

இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 15-ம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் தமது தாய் நாட்டிற்கு திரும்பி செல்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-வினித்