மீத்தேன் எரிவாயு திட்டத்தை அனுமதித்து, தஞ்சை தரணியை பாலைவனமாக்கத் துடித்த கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்திய நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்கு தெரியும்.
காவேரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சித்த கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது, உச்ச நீதிமன்றத்தின் மூலம், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், முந்தைய மத்திய அரசுக்கு விசுவாசமாக செயல்பட்ட கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது உச்ச நீதிமன்றத்தின் மூலம், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, முதற்கட்டமாக, 142 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்க, நடவடிக்கை எடுத்த நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.
ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியக் கொள்கையை வகுத்து, உர விலை ஏற்றத்திற்கு வழிவகுத்த கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது உரத்திற்கான மதிப்புக் கூட்டு வரியை, முழுவதும் விலக்கிய நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.
கருணாநிதி பொய் அறிக்கைகள் மூலம் எவ்வளவு தான் முயன்றாலும், அதிமுகவிடமிருந்து விவசாயிகளை பிரிக்க முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாரதிய ஜனதா அரசால் ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அந்த சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்தது ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக என திமுக தலைவர் கருணாநிதி சுமத்திய குற்றச்சாட்டுக்கு நான் 13.3.2015 அன்று தெளிவான விளக்கம் அளித்துள்ளேன்.
தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும், எப்போதும் பாடுபடும் அரசியல் இயக்கம் அதிமுக என்பதையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பச்சோந்தி போல் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றிக் கொள்பவர் கருணாநிதி என்பதையும், பல்வேறு உதாரணங்களுடன் எனது அறிக்கையில் நான் விளக்கியிருந்தேன்.
அதற்கு எவ்வித தெளிவான பதிலையும் கொடுக்க இயலாத காரணத்தால், ‘மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல்’ அதிமுக இந்த மசோதாவை ஆதரித்ததற்கு கற்பனையான காரணங்களை தேடி அற்பத்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.
அந்த அறிக்கையில் தனது சொந்த நலனுக்காகவே எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பவர்தான் கருணாநிதி என்பதை தன்னை அறியாமலேயே அவர் வெளிப்படுத்திவிட்டார்.
ஒரு கூட்டணியிலே இடம் பெற்றிருக்கிற போது தி.மு.க எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கும் என்பதை நான் சுட்டி காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி திமுக உறவாக இருந்தால் உண்மையாக இருக்கும் என்று கூட்டணி தர்மம் பற்றி எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், மத்திய ஆட்சியிலே அமைச்சர்களாகவும் பதவி வகித்து, தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வந்தது திமுக என்று நான் பல முறை எடுத்துக் கூறியதை உண்மை என்றே கருணாநிதி தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.
தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினராவது கூட்டணி தர்மத்திற்காகவோ அல்லது மத்தியிலே உள்ள ஆட்சி அதிகார பலன்களைப் பெறுவதற்காகவோ அல்லது மத்திய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கோ அல்ல. நாம் விசுவாசமாக இருக்க வேண்டியது நமக்கு வாக்களித்த தமிழக மக்களுக்குத் தான்.
அந்த நெஞ்சுரம் கருணாநிதிக்கும், திமுகவுக்கும் இல்லாத காரணத்தால் தான் 17 ஆண்டு காலம் மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருந்தும், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த ஒரு நன்மையையும் செய்யாததோடு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு ஆதரவளித்தும், தமிழகத்திற்கு எதிரான அரசுக்கு முட்டுக் கொடுத்தும் வந்தார் கருணாநிதி.
கையகப்படுத்தும் சட்டத்தின்படி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முன் 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், நிலத்தை கையகப்படுத்தும் போது அந்த நிலம் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலமா என்று கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கருணாநிதி படிக்கவே இல்லை என்பதைத் தான் அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொது நலத்திற்காக அரசு-தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பொது நலன் காரணமாக தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது மட்டும் தான் விவசாயிகளின் ஒப்புதல் பற்றி 2013 ஆம் ஆண்டைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது பாதிக்கப்படும் குடும்பங்களில் 80 சதவீதம் பேரிடமும், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு 70 சதவீதம் பேரிடமும் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தான் உள்ளது.
கருணாநிதி கூறுவது போல தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்ட 5 வகை நில எடுப்புகளுக்கு இது முற்றிலுமாக கைவிடப்பட்டதாகக் கூறுவது சரியல்ல.
அது போன்றே, 2013 ஆம் ஆண்டைய சட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலமா என்பது கவனிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய திருத்தச் சட்டத்தின்படி அவ்வாறு கவனிக்கத் தேவையில்லை என்றும் கருணாநிதி கூறியிருப்பதும் சரியல்ல.
முந்தையச் சட்டத்தில், வேறு நிலம் எதுவும் இல்லை என்கிற போது பாசன வசதியுள்ள பலபோகம் பயிரிடப்படும் நிலம் கையெடுப்பு செய்யலாம் என உள்ளது.
அவ்வாறு செய்யும் போது அதே அளவான சாகுபடிக்கு பயனற்ற நிலம் சாகுபடிக்கு கொண்டுவர வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் உள்ள நிகர பயிரிடும் பரப்பளவில் எந்த அளவு நில எடுப்பு செய்யலாம் என சம்பந்தப்பட்ட அரசின் அறிவிக்கையின் படி நில எடுப்பு செய்யலாம் எனவும் உள்ளது.
எனவே, 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் விவசாயம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நிலத்தை கையகப்படுத்திடக் கூடாது என எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அரசு – தனியார் கூட்டு முயற்சி திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கையகப்படுத்தும் நிலம் அரசுக்கு சொயதமாக இருக்கும் போது பாதிக்கப்படும் குடும்பங்களில் 70 சதவீதத்தனரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை தான் சம்பந்தப்பட்ட அரசு அந்தந்த நேர்வுகளில் விலக்கிக் கொள்ளலாம் என சட்ட திருத்தம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
தனியார் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை. எனவே, இதனால் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள்.
2013 ஆம் ஆண்டைய புதிய நில எடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அது பற்றி அதிமுக குழுத் தலைவர் பேசியதைப் பற்றி கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நில எடுப்பு செய்வதற்கு தகுதியான அரசு, மாநில அரசு தான், மத்திய அரசு அல்ல, ஏனெனில் ‘நிலம்’ என்ற பொருள் மாநில அரசு பட்டியலில் தான் உள்ளது என்று நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் பேசியது தான் அதிமுக எப்போதும் கொண்டுள்ள நிலை.
நில எடுப்புச் சட்டம் என்பதே மாநில அரசின் சட்டமாக இருக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு.
ஆனால் ‘சொத்தினை கையகப்படுத்துலும், வேண்டுறுத்திப் பெறுதலும்’ என்ற முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் பொருண்மை ஒருங்கியல் பட்டியலில் உள்ளதால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
2013 ஆம் ஆண்டு மக்களவையில் பேசும் போது, தனியார் நிறுவனங்களுக்காக நில எடுப்பு செய்யக் கூடாது என அதிமுக தனது கருத்தை தெரிவித்ததாக கருணாநிதி கூறியுள்ளார்.
தற்போதும் அதிமுக அதே கருத்தை தான் கொண்டுள்ளது. எனவே தான், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சலுகைகள் அளிக்கக் கூடாது என அதிமுக திருத்தம் அளித்தது.அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
2013 ஆம் ஆண்டைய நில எடுப்புச் சட்டம் 13 மத்திய சட்டங்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது பற்றி அப்போதும் அதிமுக சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதையே தான் எனது அறிக்கையிலும் நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
13 மத்திய சட்டங்களின் கீழ் நில எடுப்பு செய்யும் போது மட்டும், நில எடுப்புச் சட்டப் பிரிவுகள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது மாநில அரசுகளுக்கு எதிரானதா? இல்லையா? என்று தான் நான் கேட்டிருந்தேன்.
எனவே, 2013-ஆம் ஆண்டு அதிமுக எடுத்த நிலைப்பாட்டுக்கும், தற்போதைய நிலைப்பாட்டுக்கும் எந்த தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா 5 வகை திட்டங்களுக்கு சில விதிவிலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
மாநில அரசு தேவை என்று கருதினால், ஒவ்வொரு திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, பொதுநலத்திற்கு ஏற்ப, அந்தந்த திட்டத்திற்கு மாநில அரசு, சில குறிப்பிட்ட வரையறையிலிருந்து விலக்களிக்க இயலும். மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும்?
2013 ஆம் ஆண்டைய ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ சட்டத்தில், அத்தியாயம் III-A புதிதாக சேர்க்கப்பட்டு, அதன்படி அத்தியாயம் II-ல் உள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் III-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து, தேசிய பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, கட்டுப்படியாகக் கூடிய வீட்டுவசதி, ஏழைகளுக்கான வீட்டுவசதி, தொழில் வளாக வழி மற்றும் உள்கட்டமைப்பு, அரசிடமே நிலம் உடமையாக இருக்கும் பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் ஆகிய 5 வகை திட்டங்களுக்கு, அத்தியாயம் III மற்றும் III-ன் கீழ் விதிவிலக்கு அளிக்க, சம்பந்தப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், இந்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது, ஊரக உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு அத்தியாயம் II-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் III-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருயது, பொதுவான விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை.
ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ந்து, குறிப்பிட்ட எந்த ஒரு திட்டத்திற்கும் விலக்கு அளிக்கவேண்டுமெனில், அந்த திட்டத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அதிகாரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த திருத்த மசோதா, மாநிலங்களுக்குத் தேவையான அதிக அதிகாரத்தை வழங்குகிறதே அல்லாமல், சமூகத் தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக்கு அளித்து, 2013 ஆம் ஆண்டைய சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யவில்லை.
குறிப்பிடப்பட்ட 5 வகை நில எடுப்புக்கும் இந்த இரு அத்தியாயங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மாநில அரசே முடிவு செய்யலாம் என்னும் போது, அந்தந்த திட்டங்களுக்கு ஏற்ப, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு முடிவு செய்ய இயலும்.
2013 ஆம் ஆண்டைய மூலச் சட்டத்தில், 13 மத்திய சட்டங்களுக்கு பொது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே? அது போன்று பொது விலக்கு எதுவும், இந்த 5 வகை நில எடுப்புகளுக்கு தற்போது வழங்கப்படவில்லையே? மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டாம், மத்திய அரசிடம் தான் இந்த அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்கிறாரா எனது அறிக்கையில், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்து, தமிழக மக்களுக்கு எதிராக, கருணாநிதியும், திமுகவும், எவ்வாறு செயல்பட்டார்கள் என்று நான் எடுத்துக் காட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, 2013 மசோதாவை அதிமுக எதிர்த்து, தற்போது ஆதரவு அளித்தது இரட்டை நிலை என சொல்லியுள்ளார். இதில் எந்தவித இரட்டை நிலையும் இல்லை.
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் மசோதாவிற்கு 2013-ல் அதிமுக எதிர்ப்பு 13 மத்திய சட்டங்களுக்கு, நில எடுப்பு ஷரத்துகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே, மத்திய சட்டங்களின் படி, மத்திய அரசு நில எடுப்பு செய்வதை அதிமுக எதிர்த்தது.
கெயில் நிறுவனம் போன்ற நிறுவனங்கள், மாநில அரசுகளை எதிர்த்து, விவசாயிகளுக்கு எதிராக செயல்பட வழிவகுத்த சட்ட மசோதாவை எதிர்த்தது.
விவசாயிகளின் நலன் பாதிக்காமல், மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் தற்போதைய சட்டத் திருத்தத்தை, அதிமுக ஆதரித்துள்ளது. இவை ஒரே நிலை தான்.
கருணாநிதி அறிக்கையில், மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்த்த அதிமுக, தற்போது பா.ஜ.க அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தினை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை எப்போது கொண்டு வந்தது? என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
அதிமுகவின் வேஷம் கலைந்து விட்டது என்பது விவசாயிகளுக்கு தெரியும் என கருணாநிதி தனது அறிக்கையில் கூறி, தமிழக விவசாயிகளை ஏமாற்றலாம் என மனப்பால் குடித்தால், அது ஒரு போதும் நிறைவேறாது.
மீத்தேன் எரிவாயு திட்டத்தை அனுமதித்து, தஞ்சை தரணியை பாலைவனமாக்கத் துடித்த கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்திய நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்கு தெரியும்.
காவேரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சித்த கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது, உச்ச நீதிமன்றத்தின் மூலம், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், முந்தைய மத்திய அரசுக்கு விசுவாசமாக செயல்பட்ட கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது உச்ச நீதிமன்றத்தின் மூலம், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, முதற்கட்டமாக, 142 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்க, நடவடிக்கை எடுத்த நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.
ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியக் கொள்கையை வகுத்து, உர விலை ஏற்றத்திற்கு வழிவகுத்த கருணாநிதி, விவசாயிகளின் நண்பனா? அல்லது உரத்திற்கான மதிப்புக் கூட்டு வரியை, முழுவதும் விலக்கிய நான், விவசாயிகளின் நண்பனா? என்பது விவசாயிகளுக்குத் தெரியும்.
கருணாநிதி பொய் அறிக்கைகள் மூலம் எவ்வளவு தான் முயன்றாலும், அதிமுகவிடமிருந்து விவசாயிகளை பிரிக்க முடியாது என தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.