ஆதார் அடையாள அட்டை தொடர்பாக தனது முந்தைய உத்தரவுகளை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களையும், மானியங்களையும் பெறுவதற்கு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மானியம் உள்ளிட்ட எந்த ஒரு சலுகையை பெறவும், ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இதை மறுஆய்வு செய்யுமாறு மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களையும், உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கக் கூடாது என்றும், நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர். சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் ஏதும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி திருமண பதிவு, சம்பள விநியோகம், பி.எப் கணக்கு உள்ளிட்ட அரசின் சேவைகளுக்கு ஆதார் அட்டையை சில மாநிலங்கள் கட்டாயமாக்கியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக தனது முந்தைய உத்தரவுகளை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின். drduraibenjamin@yahoo.in