திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோயிலில் முன்புறம் உள்ள நந்தி ஆண்டுக்கு ஒருமுறை சூரிய ஒளி பட்டு தங்க நிறமாக மாறும் அதிசய காட்சியை ஆயிரக்கனக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
செங்கம் நகரில், புராதானமான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் முன் உள்ள பெரிய நந்தீஸ்வரருக்கு செங்கம் மகா பிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்து பிரதோஷவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு பங்குனி மாதம் 3-ம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சூரியஒளி இராஜகோபுரத்தின் மீது பட்டு பிறகு நந்தியின் மீது அந்த சூரிய ஒளி பட்டதும் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்ந்து காட்சியளித்தார். அதை கண்டு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அன்று முதல் ஆண்டுதோறும் அதே நாளில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதம் 3-ம் தேதி சூரிய ஒளியானது கோயிலின் கோபுரத்தின் மீது பட்டு பின்னர் நந்தி பகவான் மீது விழுகிறபோது நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்கிறார்.
இதை முன்னிட்டு இந்த ஆண்டு பங்குனி மாதம் 3-ம் நாளான மார்ச் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் கோயிலின் முன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது,
மாலை சுமார் 5.40 மணியளவில் கோபுரத்தின் மீது பட்ட சூரிய ஒளி நந்தீஸ்வரர் மீது விழுந்தபோது சிறிது நேரத்தில் நந்தீஸ்வரர் தங்க நிறமாக மாறி காட்சியளித்தார்.
கூடியிருந்த பெண்கள், பொது மக்கள் பக்தர்கள், பக்தி பரவசத்துடன் நந்தீஸ்வரை வழிபட்டனர். பின்னர் மகாபிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
– செங்கம் மா.சரவணக்குமார்.