பீகார் மாநிலத்தில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பீகார் அரசிடம் மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.
பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17–ந் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 1,217 தேர்வு மையங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க, பெற்றோர்களும் நண்பர்களும் துண்டு சீட்டில் விடைகளை எழுதி தேர்வு மையங்களுக்குள் போட்டனர்.
தேர்வு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 4 மாடி கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஏறி, தேர்வெழுதும் மாணவர்களுக்கு துண்டுச் சீட்டு போடும் படம் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக பீகார் மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பீகார் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
முறைகேடுகள் இல்லாத தேர்வு நடத்த சில விதிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. பீகாரில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் நடத்தப்படுகிறது.
முறைகேடுகள் இன்றி தேர்வு நடத்த முடியவில்லையென்றால், தனது பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றம், அமைச்சரை பார்த்து மிகவும் கூறியுள்ளது. அவர் தகுதி வாய்ந்த நபராக இல்லையென்றால், அவர் பிறருக்கு வழிவிடட்டும்” என்று தெரிவித்தார்.
-கே.பி.சுகுமார்.