ஏற்காடு பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் இவரது மனைவி வாசுகி ஆகியோர், சுனைப்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, வேலூர் கிராமத்திற்கு அருகில் மர்ம கும்பல் வழிமறித்து சக்திவேல் மற்றும் இவரது மனைவி வாசுகி ஆகியோரை பரிதாபமாக வெட்டி, தலை சிதைக்கப்பட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
தகவல் அறிந்து வந்த சேலம் மாவட்ட எஸ்.பி.சுப்புலட்சுமி, ஊரக டி.எஸ்.பி. சந்திரசேகர் ஆகியோர் ஏற்காடு போலீசாருடன் இணைந்து கொலை குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில், சக்திவேல் அக்கா மகன் கனகராஜ், அவரது நண்பர் பாக்யராஜ், கனகராஜின் மாமா லோகநாதன், அத்தை தாமரைசெல்வி, மேலும், கணேசன், குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் சொத்து தகராறில் கொலை செய்தது, சக்திவேல் அக்கா மகன் கனகராஜ் மற்றும் அவரது தம்பி தலைமறைவாக இருந்த ராஜதுரை ஆகியோர் என்பது தெரியவந்தது.
எனவே, காவல் துறையினர் கனகராஜை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜதுரையை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சக்திவேல் மற்றும் அவரது அக்கா செவ்வந்திக்கும் குடும்ப சொத்தாக இருந்து வந்த 4 ஏக்கர் நிலம் இருவருக்கும் சரிபங்கு உரிமை உண்டு என கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது.
சக்திவேலுக்கு வாரிசு ஏதும் இல்லாத நிலையில், அவரை கொன்று விட்டு அவரது பங்கு நிலத்தையும் தாங்களே அனுபவிக்க முடிவு செய்து கொலை செய்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-நவீன் குமார்.