2015-2016 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை முழு விபரம்!

pr250315a

தமிழக அரசின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2015-2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை, 2015 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றிய உரை.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்(கு) இயல்பு-(குறள் 382)

வள்ளுவப் பெருந்தகையின் இந்த பொய்யாமொழிக்கு இலக்கணமாய், மன உறுதி, கொடை, அறிவு, ஊக்கம் எனப்படும் அரசருக்குரிய நான்கு பண்புகளுக்கும் உறைவிடமாய்த் திகழும் தமிழகத்தின் விடிவெள்ளி, ஏழைகளின் ஏந்தல், தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவி, தனது அப்பழுக்கற்ற செயலாற்றலால் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள எங்களின் எழுச்சிமிகு புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன், 2015-2016 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இப்பேரவையின் முன் வைக்க விழைகிறேன். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்பினை அளித்தமைக்காக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

2.கடந்த மூன்றரை ஆண்டுகளில் எங்கள் தன்னிகரில்லாத் தலைவியின் ஆற்றல் மிகுந்த தலைமையின் கீழ், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பல வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது. காவேரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் இடம்பெறச் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தில் பெற்றது. மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனைப் பெருக்கி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தி, மின்சக்தித் துறையில் காணப்பட்ட மின்தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளியைக் குறைத்தது என வரலாற்றில் நீங்கா இடம்பெறக்கூடிய இத்தகைய பல துணிச்சலான நடவடிக்கைகளை மதிநுட்பம் மிகுந்த எங்களின் தன்னிகரில்லாத் தலைவி மக்களின் முதல்வர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே செயலாக்கி வெற்றி கண்டிட முடியும். உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து மக்களுக்கு அதிக வளம் சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்றிடும் உயர்ந்த நோக்கத்துடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 ஒரு முன்னோக்கு முயற்சியாக வரலாற்றில் நிச்சயம் நிலைபெறும்.

3. இந்த அரசு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி, மக்கள் நல்வாழ்வு போன்ற சமூகநலன் சார்ந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வியத்தகு பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், முன் எப்போதும் இருந்திராத அளவிற்கு நலத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக ஏழை எளியோரின் வாழ்வாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பை மேம்படுத்தி வேளாண் மற்றும் உற்பத்திசார் துறைகளில் அதிக முதலீடுகள் செய்வதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது; சமூக நலன் சார்ந்த பணிகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது; உறுதியான சமூக நல பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என்ற இந்த அரசின் மும்முனை நடவடிக்கைகள் தொடரும்.

4. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போற்றுதலுக்குரிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இந்த மாநிலத்தின் நிர்வாகம் உருக்குலைந்து இருந்தது. மதிநுட்பம் வாய்ந்த எங்களின் தன்னிகரில்லாத் தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் துரிதமாக செயல்பட்டு, தன்னுடைய உறுதியான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது மட்டுமன்றி, தமிழக மக்களுக்கு அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார்கள். கடந்த ஆண்டிலிருந்து உலக அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலையில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியோரைப் பாதுகாக்க வழங்கப்படும் அதிக அளவு மானியங்களாலும் நாம் தொடர்ந்து செயல்படுத்திவரும் சமூக நலத்திட்டங்களாலும் நிதிச் சுமை கூடியுள்ளது. இவற்றுடன், மத்திய அரசிடமிருந்து அதிக அளவு நிதியைப் பெற முடியும் என்ற நமது நம்பிக்கையை பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் தகர்த்துவிட்டன. இத்தகைய கடினமான சூழ்நிலையில், உயர்பொருளாதார வளர்ச்சியை எட்டவும் அதே வேளையில் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடும் திட்டங்களைத் தொடர்ந்திடும் வகையிலும், ஒரு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கடினமான பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்து அதற்கான உரிய முயற்சியைச் செய்துள்ளோம்.

பொருளாதார வளர்ச்சி

5. உயர் பொருளாதார வளர்ச்சி வீதம், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அத்தகைய பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திட நிதியைத் திரட்டி வரிவருவாயை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. தேசிய அளவில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையினாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் 2012-2013 ஆம் ஆண்டுக்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி வீதம், 3.39 சதவிகிதமாகக் குறைந்தது. எனினும், 2013-2014 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 7.29 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 4.74 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2014-2015 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி வீதம் 7.25 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவை அனைத்தும் 2004-2005 ஆம் ஆண்டு அடிப்படை விலையில் கணக்கிடப்பட்ட வளர்ச்சி வீதங்கள் ஆகும். 2014-2015 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, 2011-2012 ஆம் ஆண்டு அடிப்படை விலையில் புதிய மதிப்பீட்டுத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, 2015-2016 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதன் அடிப்படையில் நமது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு வளர்ச்சி 2015-2016 ஆம் ஆண்டில் 9 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதினான்காவது நிதி ஆணையம்

6. பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்பகிர்வு அளவை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளதை நாம் வரவேற்கிறோம். எனினும், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மொத்த நிதியின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. 2011-2012 ஆம் ஆண்டில் 53 சதவீதமாக இருந்த இந்த நிதியளவு தற்போது 49 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையும் இரண்டு விதமான நடவடிக்கைகளால் இது 49 சதவீதத்தைக் கூட எட்ட முடியாதபடி செய்துள்ளது. முதலாவதாக, சொத்துவரி போன்ற வரிகளை, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தேவையில்லாத மேல்வரி (cess) மற்றும் தலமேல்வரியாக (surcharge) மாற்றியுள்ளது. இரண்டாவதாக, மாநிலங்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மத்தியத் திட்டங்களுக்கான நிதியை மத்திய நிதிநிலை அறிக்கை கணிசமாகக் குறைத்துள்ளது. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டம், சுற்றுலா கட்டமைப்பு மேம்பாடு, ஊராட்சிகள் வலிமைப்படுத்துதல் திட்டம், பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி மற்றும் உணவு பதப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் உள்ளிட்ட 8 மத்திய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. வழக்கமான மத்திய உதவி ((Normal Central Assistance) மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி ஆகியவையும் வருங்காலத்தில் கிடைக்காது. இதனால் 2014-2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகளின் அடிப்படையில், நமது மாநிலத்திற்கு வருடத்திற்கு ரூபாய் 1,137 கோடி அளவிற்கு வருவாய் வரவில் இழப்பு ஏற்படும். மேலும், மாநிலங்கள் இதுவரை பெற்றுவந்த குடிசைப் பகுதி மேம்பாடு, பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாத்தல், கடலோரப் பாதுகாப்பு, பழம்பெரும் கட்டடங்களை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான மானியம் போன்ற மாநிலங்களின் குறிப்பிட்ட தேவைக்கான மானிய நிதியுதவிகளும் (State Specific Grants) சாலைகளைப் பராமரிப்பதற்கான மானியங்களும் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கூறிய திட்டங்களுக்காக கடந்த நிதி ஆணையத்தின் ஐந்தாண்டுக் காலத்தில் 4,669 கோடி ரூபாய் நிதியை நமது மாநிலம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தவிர தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நிலைக்கத்தக்க வேளாண்மைக்கான வளர்ச்சித் திட்டம், தேசிய ஊரகக் குடிநீர்த் திட்டம், தேசிய சுகாதாரத் திட்டம், தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2014-2015 ஆம் ஆண்டை விட வரும் 2015-2016 ஆம் நிதியாண்டில் 21,116 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான நிதிப் பங்கீட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முனைந்திருப்பதால், மாநிலங்கள் கூடுதல் நிதிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

7. பகிர்ந்தளிக்கத்தக்க பொதுவான வரித் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவந்த நிதிப் பகிர்வை 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாகவும் சேவை வரித் தொகுப்பிலிருந்து கிடைத்து வந்த பங்கான 5.047 சதவீதத்தை 4.104 சதவீதமாகவும் பெருமளவு குறைத்திருப்பதன் மூலம், பதினான்காவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது. நியாயமான மற்றும் முற்போக்கான அளவுகோல்களை பதினான்காவது நிதி ஆணையம் பின்பற்றாதது மட்டுமன்றி நிர்வாகத் திறன், நிதி மேலாண்மைத் திறன் போன்ற அளவுகோல்களையும் முழுமையாகப் புறக்கணித்துள்ளதால், சிறந்த நிதி மேலாண்மை வழிமுறைகளை வழுவாது பின்பற்றி சிறப்பான ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மொத்த பரப்பளவு, தனிநபர் வருமான இடைவெளி ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்ட அதிகமான முக்கியத்துவம், மொத்த பசுமைப் பரப்பின் அளவு போன்ற பொருத்தம் இல்லாத அளவுகோல்களைப் புகுத்தியது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கு பாதகமாக அமைந்துவிட்டன. பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக, வெளிச்சந்தையில் அதிகக் கடன் திரட்டியும், வரி விதிப்பதன் மூலம் வருவாயை அதிகமாகப் பெருக்கியும் நிதி முதலீடு செய்ய முனைந்த தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டது. வரிகள் மூலம் நிதி திரட்டும் அதிகாரம் மத்திய அரசிடமே அதிகம் குவிந்துள்ள நிலையில், உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டும் மாநிலங்கள், தம்முடைய சொந்த வருவாயினை மட்டுமே நம்பி இயங்கிட வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மாநில அரசு எடுக்கும் முயற்சிகளின் காரணமாக ஏற்படும் உயர் பொருளாதார வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் அதிக வரி வருவாய், குறிப்பாக, வருமான வரி, சுங்கத்தீர்வை, மத்திய ஆயத்தீர்வை, நிறுவனங்கள் மீதான வரிமற்றும் சேவை வரிகள் ஆகியவற்றின் பயன்கள் அனைத்தும் மத்திய அரசுக்கே கிடைக்கும் நிலையில், மாநில அரசால் விற்பனை வரியின் பயனை மட்டுமே பெற இயலும். இதனால், தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்வதுடன், தங்களின் நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்குக்கூட என்றென்றும் மத்திய அரசினைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். மத்திய அரசு முன்வைக்கும் இத்தகைய கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம், மாநிலங்களும், மத்திய அரசும் சமச்சீரற்ற வருவாய் ஆதாரங்களைக் கொண்டுள்ள நிலையில் அவற்றை சமமான பங்குதாரர்களாகக் கருதுவது வியப்பை அளிக்கிறது.
எனவே, வருவாய்ப் பற்றாக்குறையால் அத்தகைய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தவிர்க்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அடையவும் மத்திய அரசு நேரடி வரி வருவாயை மட்டும் தனது அதிகார வரம்பில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து மறைமுக வரி வருவாயினையும் மாநிலங்களுக்கே வழங்கிட வேண்டியகாலம் கனிந்துவிட்டது என்றே கருதுகிறேன்.

ஆண்டுத் திட்டம்

8. பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் (2012-2017) திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கான திட்ட இலக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவாக நிர்ணயிக்கப்பட்டதில், 2014-2015 ஆம் ஆண்டுவரை 1,16,933 கோடி ரூபாய் அளவு எய்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தும் 66 திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்குத் தொகையை மாநில அரசின் மூலமாக அளிக்கிறது. இந்த முறையில், ஏற்கனவே செய்யப்பட்ட ஒதுக்கீடான 42,185 கோடி ரூபாயிலிருந்து 50,660 கோடி ரூபாயாக நடப்பு ஆண்டின் திட்ட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டிற்கான மாநிலத் திட்ட ஒதுக்கீடு 55,100 கோடி ரூபாயாக மேலும் உயர்த்தப்படும்.

9.வருவாய், வேலைவாய்ப்பு, வறுமை, மக்கள் நலன், கல்வி மற்றும் பாலின வேறுபாடு ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் விதமாக, ~மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி என்ற ஒரு புதிய திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முக்கிய காரணிகளில் காணப்படும் குறிப்பிட்ட இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கத்தோடு, புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்திட இது வழிவகுத்துள்ளது. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ், இதுவரை 181.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில் உள்ள 105 பின்தங்கிய வட்டாரங்களில், 322 திட்டங்களைச் செயல்படுத்த மாநிலத் திட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிலும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மீது இந்த புதிய சிறப்புத் திட்டத்தின் மூலம் தனிக்கவனம் செலுத்தப்படும். 2015-2016 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சிமலை மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இடதுசாரி தீவிரவாதம் ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகள் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் அளிக்கும் வகையில், 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் இந்த அரசால் தொடங்கப்படும்.

வறுமை ஒழிப்பு

10.பன்முகத்தன்மையுடைய வறுமையைப் போக்கிட விரிவான ஓர் அணுகுமுறை தேவை. இத்தகைய அணுகுமுறையை உள்ளடக்கிய புதுமையான வழிமுறைகளைக் கொண்ட புதுவாழ்வுத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் 4,174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,667 கோடி ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ், இதுவரை 1.64 இலட்சம் மாற்றுத் திறனாளிகள் உட்பட, மொத்தம் 9.63 இலட்சம் குடும்பங்கள் பயனடையும் வகையில், 1,436 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 3.27 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்கு ஏற்ற திறன் பயிற்சியை பெற்றுள்ளார்கள். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வாழ்வாதார நிதி உதவியாக 2014-2015 ஆம் ஆண்டுவரை 369 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 255.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11.இதே போன்ற அணுகுமுறையோடு மாநிலத்திலுள்ள மற்ற வட்டாரங்களில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-2013 ஆம் ஆண்டு முதல், படிப்படியாக செயல்படுத்திடும் வகையில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 60 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 110 வட்டாரங்களிலும், மூன்றாம் கட்டமாக 95 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற வறுமையை விரைவில் ஒழித்திடும் வகையில் இந்த அரசு மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறியும் பணியினை 2015-2016 ஆம் ஆண்டுக்குள் முடித்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் முதற்கட்ட வட்டாரங்களில் பயிற்சி மற்றும் வாழ்வாதாரத் திட்டக் கூறுகளை நடைமுறைப்படுத்துவதை தீவிரப்படுத்துவதற்கான உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 250.36 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

12. குடிசைப் பகுதிகள் போன்ற சிக்கலான பிரச்சினைகளின் காரணமாக கிராமப்புற வறுமையைக் காட்டிலும் நகர்ப்புர வறுமையை எதிர்கொள்வது ஒரு கடினமான சவாலாக உள்ளது. நகர்ப்புர வறுமையை எதிர்கொள்ள இந்த அரசு 2012-2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் என்ற ஒரு முழுமையான திட்டத்தைத் தொடங்கியது. அதே வேளையில் முந்தைய சுவர்ண ஜெயந்தி நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக, தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு 2014-2015 ஆம் ஆண்டில் அறிவித்தது. பேரூராட்சிகளுக்கும், ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகராட்சிகளுக்கும் இப்புதிய திட்டம் விரிவுபடுத்தப்படாததால், வறுமை ஒழிப்புத் திட்டங்களை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்திடும் வகையில் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கிடைக்கும் நிதியை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்க நிதியோடு ஒருங்கிணைத்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்திற்காக 250 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்திற்காக 107 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் வீட்டுவசதிகளை ஏற்படுத்தவும், கல்வி, சுகாதாரம் போன்ற பணிகளுக்கும் தேவையான நிதி அந்தந்த துறைகளுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.

நிர்வாக ஆளுமை

13. நிர்வாகத்தை மேம்படுத்தவும் அரசு சார்ந்த சேவைகளை திறம்பட அளித்திடவும் இந்த அரசு பல சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. மாநிலமெங்கும் அமைக்கப்பட்டுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாக, அரசு சார்ந்த பொது சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், அனைவரையும் சென்று அடைவதுடன், அரசு நிர்வாகத்தின் திறனும் மேம்பட்டு, அதன் வெளிப்படைத் தன்மையும் அதிகரித்துள்ளது. குடிமைப்பொருள் வழங்கல்துறை, காவல்துறை, கருவூலத்துறை, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகியவற்றை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டங்களுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த அரசின் புதுமையான முயற்சியாக தொடங்கப்பட்ட அம்மா திட்டம், அரசு நிர்வாகத்தை நேரடியாக மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மொத்தம் 43.90 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுப் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உரிய பயன்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள்தொகை பதிவகத் திட்டத்தின் கீழ் (National Population Registry) ஆதார் எண் இணைப்புடன் கூடிய குடிமக்கள் தரவுகளின் பதிவு சதவீதம் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள்தொகைப் பதிவகத் தரவுகளைக் கொண்டு, மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (State Resident Data Hub) ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை பல்வேறு அரசு நலத்திட்டப் பயனாளிகளின் தகவல் தொகுப்போடு ஒருங்கிணைப்பதன் மூலம், உண்மையான பயனாளிகளை எளிதில் கண்டறியவும், நிதி விரயமாவதைப் பெருமளவு தடுக்கவும் இயலும். பயனாளிகளுக்கு உதவித் தொகையை நேரடியாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்குவதற்கு முன்னரே, சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி ஆகியவற்றை பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக அளிக்கும் திட்டத்தை இந்த அரசு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

14.தொலைநோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ளவாறு, புதுமையான முயற்சிகளை ஊக்குவித்திட நமது அரசு ஆர்வத்துடன் முனைந்துள்ளது. அதன் முதற்படியாக, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamil Nadu Innovation Initiatives) என்ற புதிய திட்டத்தினை ஆண்டிற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மாநில திட்டக்குழு உருவாக்கியுள்ளது. முதற்கட்டமாக 84.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 32 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து, தரவு ஆய்வு மையம் (Data Analytics Unit) ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தும். அரசிடம் குவிந்துள்ள புள்ளி விபரங்கள் நிகழ்கால அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, மக்களுக்கு சேவைகளை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்குடன் அரசின் கொள்கைகளை அவ்வப்போது மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இதன்மூலமாக ஏற்படும். இத்தகைய மையத்தை ஏற்படுத்தும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கு

15. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும் மத நல்லிணக்கத்தையும் தமிழக காவல்துறை சிறப்பாக பேணிப் பாதுகாத்து வருகிறது. தேசவிரோத, பிரிவினைவாத சக்திகளின் சவால்களைச் சந்திக்க எப்போதும் விழிப்புணர்வுடன் செயலாற்றி வருகிறது. போதிய நிதி ஒதுக்கீடு, நவீனக் கருவிகள் மற்றும் மேம்பட்ட பயிற்சி ஆகியவற்றை அளித்து, நமது காவல்துறைக்கு இந்த அரசு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் 3,184.47 கோடி ரூபாயாக இருந்த காவல்துறைக்கான ஒதுக்கீடு தொடர்ந்து உயர்த்தப்பட்டு, முன் எப்போதும் இல்லாத அளவில் 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 5,568.81 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

16. காவல்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறைக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக 2,216.99 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கட்டடங்கள் கட்டுவதற்காக 538.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு, மீட்புப் பணிகள்

17. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனப்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 73.23 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களைத் தொடங்கவும், 66 புதிய தீயணைப்பு வண்டிகள் வாங்கவும், மூன்று புதிய வான் தூக்கிகள் வாங்கவும் இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக இத்துறை 541 உயிர்களைக் காப்பாற்றவும், 1,613.49 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேதமடைவதிலிருந்து தடுத்துப் பாதுகாக்கவும் முடிந்தது. துரிதமாகச் செயலாற்றும் துணிவுமிக்க நவீனப் படையாக இத்துறை மாற்றம் அடைந்துள்ளதை, அண்மையில் மௌலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டட விபத்து மீட்புப் பணிகள் நிரூபித்துள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்துறைக்கு 198.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள்

18. சிறைக் கைதிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும் மையங்களாக சிறைச்சாலைகளை மாற்றிட இந்த அரசு முனைந்துள்ளது. கைதிகள் விடுதலை அடைந்து செல்லும்போது அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளில் ஈடுபட பயிற்சி பெறும் வகையில், 10.78 கோடி ரூபாய் செலவில் பல்வேறு தொழிற்பயிற்சி அலகுகள் சிறைகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நெரிசலைத் தவிர்த்து நல்ல வாழ்க்கைச் சூழலை அளிப்பதற்காக மாநிலத்தில் உள்ள சிறைக் கட்டமைப்பும் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்துறைக்கு 227.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதி நிர்வாகம்

19. கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள நீதி நிர்வாக அமைப்புகள் பெரும் அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற நீதித் துறைக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைத்திட 134 கோடி ரூபாய் செலவில் 169 புதிய நீதிமன்றங்களை அமைக்கவும் இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தை மாநில அரசு நிதியிலிருந்து தொடர்ந்து செயல்படுத்திடவும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளது. நீதித் துறையை நவீனமயமாக்கும் பணியை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் நீதி நிர்வாகத்துறைக்கு மொத்தமாக 809.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பு

20. சாலை விபத்துக்களையும் அவற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுப்பதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 245.30 கோடி ரூபாய் அளவிலும், சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து மேலும் 200 கோடி ரூபாய் அளவிலும், சாலைப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்துக்கள் அதிகமாக ஏற்படக்கூடிய பகுதிகளில் விபத்து ஏற்படக் காரணமான குறைபாடுகளைச் (Black Spots) சரிசெய்யவும், தேவைப்படும் பொறியியல் ரீதியான முக்கிய மாற்றங்களை சாலைகளில் மேற்கொள்ளவும் இப்பணிகள் உதவும். வரும் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு நிதிக்காக 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மொழி வளர்ச்சி

21. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக நமது அரசு 135.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு தரப்படுத்தப்பட்ட கல்வித் தொகுப்புகள், எண்முறை நூலகம், கல்வி முறைகள் ஆகியவற்றை அளித்து தமிழ் இணையக் கல்விக் கழகம் சிறந்த சேவையாற்றி வருகிறது. 13,327 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொல் இலக்கண அகராதியை எண்முறைப்படுத்தி, இணையத்தில் வழங்கிடுவதற்கான பெரும் முயற்சி ஒன்றையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 17, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட 170 முக்கிய புத்தகங்கள் இலக்கமுறையில் (Digitised) தயாரிக்கப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக 46.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாகம்

22. இந்த அரசின் சீரிய செயல்பாடுகளின் காரணமாக மாநிலத்தில் வருவாய் நிர்வாகம் புத்துயிர் பெற்றுள்ளது. சேவைகளை விரைவாக வழங்குவதும் அவை மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 2011 மே மாதம் முதல் புதிய வருவாய் வட்டங்களும், வருவாய்க் கோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல், 338.73 கோடி ரூபாய் செலவில் வருவாய்த் துறைக்கான புதிய கட்டடப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவாகப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் கோரிக்கைகளைத் தீர்வு செய்வதற்கான பெரும் முயற்சியை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் 46.68 இலட்சம் பட்டா மாறுதல்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-2015 ஆம் ஆண்டில் 3 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை ஏழை எளியோருக்கு வழங்கிட இந்த அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இந்த இலக்கு எய்தப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் மேலும் 3.5 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 10.9.2011-லிருந்து இதுவரை 33.65 இலட்சம் பயனாளிகளுக்கு 2,829.19 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 662.36 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிற்கு மொத்தமாக வருவாய்த் துறைக்கு 6,126.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை

23. மாநிலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் குறிக்கோளை எய்திட, ஒருங்கிணைந்த அணுகுமுறை இந்த அரசால் செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. பயிர் சார்ந்த அணுகுமுறைகள், வேளாண் விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக பயிர்ப் பரப்பு, உற்பத்தித் திறன் மற்றும் விவசாயிகளின் வருவாயை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது. நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 298.95 கோடி ரூபாய் அளவிலும், நிலைக்கத்தக்க வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், 90 கோடி ரூபாய் அளவிலும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண்துறையில் இந்த அரசு செய்துள்ள பெரும் முதலீடுகள் பெரும்பாலும் மாநில அரசு நிதியிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுடன் மத்திய அரசின் நிதியும் பயன்படுத்தப்படுகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் 2,072.43 கோடி ரூபாயாக இருந்த வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு, வரும் நிதியாண்டில் இதுவரை இருந்திராத அளவாக 6,613.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

24. நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவிப்பதற்கும், நீர்ப் பயன்பாட்டுத் திறனை உயர்த்துவதற்கும் இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசு 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத அளவிலேயே மானியம் வழங்கிவரும் நிலையிலும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத அளவிலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத அளவிலும் நுண்ணீர்ப் பாசனப் பணிகளை மேற்கொள்ள, மாநில அரசு மானியம் அளித்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்து, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 605.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.06 இலட்சம் ஏக்கர் பரப்பை நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவர வழிவகுத்துள்ளது. வரும் நிதியாண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும் 1.20 இலட்சம் ஏக்கர் பரப்பை நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து, நீர்ப் பயன்பாட்டுத் திறனை உயர்த்திட இந்த அரசு முனைப்புடன் செயல்படும்.

25. தோட்டக்கலை, விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதைக் கருத்தில் கொண்டு, 2010-2011 ஆம் ஆண்டில் 23.25 இலட்சம் ஏக்கராக இருந்த நமது மாநிலத்தின் தோட்டப் பயிர் சாகுபடி பரப்பளவு 2014-2015 ஆம் ஆண்டில் 25.95 இலட்சம் ஏக்கராக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி, 2015-2016 ஆம் ஆண்டில் இப்பரப்பு 27.18 இலட்சம் ஏக்கராக மேலும் உயர்த்தப்படும். இத்திட்டங்களின்கீழ், 111.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2015-2016 ஆம் ஆண்டில் உயர் தொழில்நுட்ப முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

26. வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்குத் தரமுள்ள விதைகள், உரங்கள் போன்ற வேளாண் இடுபொருட்கள் சரியான நேரத்தில், நியாயமான விலையில் கிடைப்பது இன்றியமையாததாகும். விவசாயிகளுக்குத் தரமான விதைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, தொடக்க நிதியுதவியாக 25 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை (Tamil Nadu Seed Development Agency) என்ற புதிய அமைப்பை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோட்டப்பயிர்களுக்கான தரமுள்ள விதைகள் மற்றும் இடுபொருட்களை தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை ((Tamil Nadu Horticulture Development Agency) தொடர்ந்து வழங்கும். உரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (TANFED) இந்த அரசு வட்டியில்லாக் கடன் வழங்கி வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில் 576.60 கோடி ரூபாய் மதிப்பிலான 4.69 இலட்சம் மெட்ரிக் டன் உரங்களை கூட்டுறவு அமைப்புகள் விநியோகம் செய்துள்ளன. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திட தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

27. இந்த ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பயிர்க்கடன் இலக்கான 5,000 கோடி ரூபாய் உறுதியாக எய்தப்படும். இதுவரை, 4,955 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டு 9.72 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வரும் நிதியாண்டில், இதுவரை இருந்திராத அளவிற்கு, அதாவது 5,500 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும். மேலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு இக்கடன்கள் வட்டியின்றி கிடைக்கும். இதற்கான, வட்டி மானியம் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

28. கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் இயந்திரப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 227.16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கணிசமான அளவில் பண்ணை இயந்திரப் பயன்பாட்டை மேற்கொள்வதற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் நிதியை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

29. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 2,000 மெட்ரிக் டன்னிலிருந்து 10,000 மெட்ரிக் டன் வரையிலான கொள்ளளவு கொண்ட 88 நவீன சேமிப்புக் கிடங்குகளும், தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 70 குளிர் சாதன சேமிப்புக் கிடங்குகளும் 149.86 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளியில் வாழைக்கும், கிருஷ்ணகிரி மற்றும் தேனியில் மாம்பழத்திற்கும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் தக்காளிக்கும், திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளியில் வெங்காயத்திற்கும், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் மிளகாய்க்கும், ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் குளிர் சாதன சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

30.விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய இந்த அரசு முனைந்துள்ளது. நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கூடுதலாக, அதாவது சாதாரண இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 50 ரூபாயும், சன்ன இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 70 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத் தொகையாக வழங்கி, சாதாரண இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,410 ரூபாயும், சன்ன இரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,470 ரூபாயும் இறுதி விலையாக இந்த அரசு அளித்து வருகிறது. நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத்தொகைக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கேற்ற கொள்முதல் விலைக் கொள்கையை இந்த அரசு தொடர்ந்து பின்பற்றும்.

கால்நடை பராமரிப்பு

31.கால்நடை பராமரிப்புத் துறையின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. விலையில்லா கறவைப் பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் முன்னோடித் திட்டங்கள் ஏழை எளியோருக்குப் பெரும் பயனளித்துள்ளன. 2015-2016 ஆம் ஆண்டிலும், 12,000 கறவைப் பசுக்களும், ஆறு இலட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளும் தொடர்ந்து வழங்கிட 241.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கோழி வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடையாத பின்தங்கிய பகுதிகளில் கோழி வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கோழி வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கும் இந்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடரும். இதற்காக 2015-2016 ஆம் ஆண்டிற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

32. இந்த அரசால் கால்நடைத்துறை கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நபார்டு வங்கி உதவியுடன் 282.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டட கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, 785 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 100 கால்நடை கிளை நிலையங்களும், 20 கால்நடை மருந்தகங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மேலும் 25 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்படும்.

33. கால்நடை பராமரிப்புத் துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்த தரமான தீவனம் கிடைப்பது அவசியமானது. தீவன உற்பத்தியை உயர்த்துவதற்காக, 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தீவன உற்பத்தி வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வறட்சிக் காலங்களில் தீவனத் தட்டுப்பாட்டைப் போக்க 18.50 கோடி ரூபாய் செலவில் 185 தீவனக் கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், 39.65 கோடி ரூபாய் செலவில் 32,360 ஏக்கர் அளவிலான விவசாயிகளின் நிலங்கள் தீவனப்பயிர் உற்பத்தியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீவன உற்பத்தி மேம்பாட்டிற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

34. ஆவின் நிறுவனத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் 409.94 கோடி ரூபாய் அளவிற்கு இந்த அரசு நிதியுதவி அளித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களாகிய தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவு பதப்படுத்தும் திட்டம் ஆகியவற்றின் கீழ் கிடைக்கும் நிதியுதவியையும், நபார்டு கடன் உதவியையும் சேர்த்து, ஆவின் நிறுவனத்திற்கும் அதன் உறுப்பு கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் சராசரி பால் கொள்முதல் நாளொன்றுக்கு 30 இலட்சம் லிட்டராக உயர்ந்து விவசாயிகளுக்கு அதிக வருவாய் அளித்து வருகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பால்வளத்துறைக்கு 100.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்வளம்
35. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு தலா 4,000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவது, மீன்பிடிப்பு தடை செய்யப்படும் காலங்களில் வழங்கப்படும் உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 2,000 ரூபாய் வழங்குவது, போன்ற இந்த அரசின் முன் முயற்சிகளால், நமது மீனவர்கள் சந்தித்துவரும் இன்னல்கள் குறைந்துள்ளன. 2014-2015 ஆம் ஆண்டில் மீனவர், மீனவ பெண்களுக்கான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகை 1,800 ரூபாயிலிருந்து 2,700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களிலும், மீன்பிடி தடைசெய்யப்பட்ட காலங்களிலும் வழங்கப்படும். நிதி உதவிக்காக, இந்த அரசு 180.54 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இவற்றிற்காக 183 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

36. கடந்த நான்கு ஆண்டுகளில் மீன்பிடிக் கட்டமைப்பை பெருமளவு மேம்படுத்துவதற்காக 819.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 30 புதிய மீன் இறங்கு தளங்களை அமைத்தல், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் மற்றும் பூம்புகாரில் மீன்பிடி துறைமுகங்கள் அமைத்தல், சென்னை, கடலூர், பழையாறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் சின்னமுட்டம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் இவற்றுள் முக்கியமானவை ஆகும். உறுதியளிக்கப்பட்ட மத்திய அரசின் உதவி கிடைக்கப்பெறாத சில இனங்களில் கூட, மாநில அரசு தனது நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மீனளத் துறைக்காக 728.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டம்

37. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2011 ஜூன் மாதம் முதல், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசியை இந்த அரசு வழங்கி வருகிறது. மேலும் சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் மானிய விலையில் இந்த அரசு அளித்து வருகிறது. இதனுடன், சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்யும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. பருப்பு வகைகளின் சந்தை விலை உயர்ந்துள்ளதால் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்கான செலவும் பெருமளவு உயர்ந்துள்ளது. இத்தகைய நிதிச்சுமைக்கு இடையிலும், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தை நமது மாநிலம் தொடர்ந்து செயல்படுத்தும். வரும் நிதியாண்டில் உணவு மானியத்திற்கு 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

38. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு பல புதுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. சந்தை அளவில், குறிப்பிட்ட விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடு, மாநில விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதியம் திறன்பட செயல்படுவதற்காக அதற்கான நிதியம் 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, மிகவும் இன்றியமையாத பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியன மிகக் குறைந்த விலையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதால், ஆண்டுதோறும் 1,230 கோடி ரூபாய் மானியச் சுமை ஏற்படுகிறது. கூடுதலாக, பண்ணைப் பசுமைக் கடைகளைக் கூட்டுறவு அமைப்புகள் தொடங்கி குறைந்த விலையில் காய்கறிகளை விற்று வருவதோடு, அம்மா மருந்தகங்கள் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், அமுதம் கூட்டுறவு அங்காடிகளை விரிவாக்கத் தேவையானநடவடிக்கைகளை, 20 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு போன்ற திட்டங்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்திட இந்த அரசு மேற்கொண்டுள்ள மேலும் சில குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.

நீர்ப் பாசனம்

39. காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகளில் இந்த அரசு மேற்கொண்ட அயராத போராட்டங்களும், பெற்ற வியத்தகு வெற்றிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவேரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு, சட்டத்திற்குப் புறம்பாக அணை கட்ட எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியவாறு காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும். மேலும், முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைப்பதற்கான பணிகள் 369 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக நடந்து வருகின்றன. காவேரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 254.45 கோடி ரூபாய் செலவில் கட்டளையில் கதவணை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. வரும் நிதியாண்டிற்கு நதிநீர் இணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள 253.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

40. உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில் 113 அணைகளைப் புனரமைப்பதற்காக, அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இதற்காக 450.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் 2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டுவரும் பாசன விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்வள மேலாண்மைத் திட்டம் (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management) வரும் ஜூன் 2015ல் முடிவடைகிறது. இத்திட்டத்தில் இதுவரை 2,544.15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2,950 கோடி ரூபாய்க்கு உலக வங்கியின் நிதியுதவியைக் கோரி மத்திய அரசுக்குத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள, மற்றொரு அயல்நாட்டு உதவிபெறும் திட்டமாகிய காவேரி வடிநில பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்திற்கான பணிகள் 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கும். இந்தத் திட்டத்தில் வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

41. ஏரிகள், அணைக்கட்டுகள் மற்றும் வாய்க்கால்களைப் புனரமைத்தல், புதிய ஏரிகளை உருவாக்குதல், புதிய அணைக்கட்டுகள், பாலங்கள், தடுப்புச் சுவர்கள், தடுப்பணைகள் போன்றவற்றை அமைத்தல் ஆகிய பணிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களில் பெறப்பட்ட நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 995.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 117 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், 491.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 69 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளுக்காக, 334.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2010-2011 ஆம் ஆண்டில் 1,954.97 கோடி ரூபாயாக இருந்த நீர்ப்பாசனத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 3,727.37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனம்

42. மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், காடு வளர்ப்புப் பணிகளில் சமுதாயத்தின் பங்களிப்பை உறுதி செய்யவும், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம், நபார்டு கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுத் திட்டம், மரம் நடும் மாபெரும் திட்டம், தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம் 115.91 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டில் 122.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நீர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 96.50 கோடி ரூபாய் நபார்டு வங்கி நிதியுதவி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மரம் நடும் மாபெரும் திட்டத்தின் கீழ் 122.17 கோடி ரூபாய் செலவில் 195 இலட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டும், 53.72 கோடி ரூபாய் செலவில் 67 இலட்சம் மரக் கன்றுகள் நடுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வனப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக பதின்மூன்றாவது நிதி ஆணையம் வழங்கிய 142.48 கோடி ரூபாய் மானியத்தையும் இந்த அரசு முறையாகப் பயன்படுத்தியுள்ளது. விலங்குகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 51.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.50 கிலோ மீட்டர் நீளமுள்ள சூரிய ஒளி மின் வேலிகளும், 168.19 கிலோ மீட்டர் நீளமுள்ள யானை புகா அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

43. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, அடையாறு நதி முகத்துவாரம், மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பகுதி போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பின் விளிம்பில் உள்ள பகுதிகளைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள மாதவரம், அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரிகளில் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளும், இதர சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளும் 50 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்காக 754.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம்

44. 2011 ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருந்த காரணத்தால், தமிழகத்தில் மின்சார விநியோகம் மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்காக இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அப்போதைய மின் தேவை 235 மில்லியன் யூனிட்டுகளாகவும், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 33 சதவீதமாகவும் இருந்தது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றாம் நிலை அலகு, வட சென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் நிலை அலகு, தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகமும் இணைந்து வல்லூரில் அமைத்துள்ள உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகள் போன்ற திட்டங்களின் பணிகளை முடித்து மின் உற்பத்தியைத் தொடங்கியும், இடைக்கால, நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், 4,991 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரத்தைப் பெற்று, முந்தைய அரசால் தீர்வு காணப்படாமல் விட்டுச் செல்லப்பட்ட மின் பற்றாக்குறைச் சூழலை திட்டமிட்ட முறையில் இந்த அரசு சீர்செய்து வருகிறது. தற்போது மின்சாரப் பயன்பாட்டிற்கான தேவை கணிசமான அளவு உயர்ந்துள்ளபோதிலும், மின் தேவைக்கும் மின் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, 24.6.2014 அன்று இதுவரை அதிகபட்ச உச்ச மின் தேவை அளவான 13,775 மெகாவாட் மின் தேவையையும் நமது மாநிலம் நிறைவு செய்துள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

45. தமிழகத்தின் எதிர்கால மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப் பார்வையோடு எண்ணூர் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கம் (1 x  660 மெகாவாட்), எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம் (2 x 660 மெகாவாட்) போன்ற மின் உற்பத்தித் திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மட்டுமன்றி எண்ணூர் மின் உற்பத்தி நிலைய மாற்றுத் திட்டம் (1 x  660 மெகாவாட்), வடசென்னை மின் உற்பத்தி திட்டம் நிலை III (1 x 800 மெகாவாட்) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

46. புதிய மின் திட்டங்களையும், மின் சுமையில் (load profile) உள்ள மாற்றங்களையும் கருத்தில் கொண்டு மின் கடவு மற்றும் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெருமளவில் கொண்டு செல்வதற்காக, 6,000 கோடி ரூபாய் செலவில் நமது மாநிலத்தில் அதிக திறன் கொண்ட மின்கடவுப் பாதை இணைப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் எடுத்து வருகிறது. இந்த மின்கடவுப் பாதைக் கட்டமைப்பின் ஒரு பகுதிக்கு 1,593 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி தேசிய தூய்மை சக்தி நிதியத்திலிருந்து 40 சதவீதம் மானியமாகவும், கே.எப்.டபிள்யூ ஜெர்மன் வங்கியிலிருந்து 40 சதவீதம் கடனாகவும், எஞ்சிய 20 சதவீதம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தால் பங்கு மூலதன நிதியாகவும் அளிக்கப்படும்.

47. 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தித் திறனை அமைப்பதற்காக புதுமையான சூரிய ஒளி மின்சாரக் கொள்கையை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2012 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள். அவர்கள் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு இதுவரை 115 மெகாவாட் சூரிய மின்சக்தித் திறன், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் முன்னுரிமை மின்கட்டணமாக யூனிட்டுக்கு 7.01 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 5,366 மெகாவாட் அமைக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 156 மெகாவாட் அமைக்க பதின்மூன்று நிறுவனங்களுடன் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட, இந்த அரசு தொடர்ந்து முனைப்புடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முன்முயற்சிகளின் பலனாக, சூரிய ஒளி சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் நம்மாநிலம் செய்துள்ள சாதனைகளைப் பாராட்டி பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, 1,015.13 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக நமது மாநிலம் பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

48. நிதிச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகம் வெளியிட்ட 6,353 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்களை இந்த அரசே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தது. இக்கடன் பத்திரங்களில் 1,000 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, அதை இந்த நிதியாண்டில் திருப்பிச் செலுத்தியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் மேலும் 2,000 கோடி ரூபாய் அளவிலான கடன் பொறுப்புகள் இந்த அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.

49. மாநிலத்தின் மின்சார மானியச் செலவு தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் நிதிச் சுமை அதிகரித்து வந்தாலும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில் மானியம், பங்கு மூலதன உதவி, பண இழப்பிற்கான நிதியுதவி, கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அரசால் எற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் ஆகியவற்றிற்காக மொத்தம் 11,748 கோடி ரூபாயை தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகத்திற்கு இந்த அரசு நிதியுதவியாக வழங்கியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு 7,136 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகத்திற்கு வழங்கப்படும் பங்கு மூலதன உதவிக்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மின்சாரத் துறைக்கு மொத்த நிதியுதவியாக 13,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை

50. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2,922 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு வழித்தட முக்கிய மாவட்டச் சாலைகளை 1,481 கோடி ரூபாய் செலவில் இடைவழித்தட (Intermediate Lane) சாலைகளாகவும், 810 கிலோ மீட்டர் நீளமுள்ள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகளை 447.34 கோடி ரூபாய் செலவில் இருவழித்தடச் சாலைகளாகவும் அகலப்படுத்துவதற்கான பணிகள், இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சீராகச் செல்ல ஏதுவாக, 2015-2016 ஆம் ஆண்டில் ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 4,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நிதியாண்டிற்கு ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு மொத்தமாக 8,228.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

51. நமது நாட்டின் நிதி மையமாக, சென்னை பெருநகர் பகுதி உருவெடுத்து வருவதால், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பெருமளவு உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரத்தின் புதிதாக விரிவாக்கப்பட்ட மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் 2014-2015 ஆம் ஆண்டில் 250 கோடி ரூபாய் செலவில் சாலை மேம்பாட்டுப் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. கிராமப்புற சாலைகளை வலுப்படுத்திட, பேருந்துகள் செல்லக்கூடிய 7,964 கிலோ மீட்டர் நீளமுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள சாலைகள், இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு உயர்த்தப்படுவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. இச்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

52. உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-ஐஐ-ன் கீழ், 5,171 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அதிக போக்குவரத்து உள்ள சாலைத் தடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, 2015-2016 ஆம் ஆண்டில் 427 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை, 2,414 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்ட இருவழித்தடச் சாலைகளாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 145 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகத் தரம் உயர்த்துவதற்கான பணிகள், அரசுத்துறை-தனியார்துறைப் பங்களிப்பு மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளுக்காக 1,261.95 கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து

53. பொது மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் அளித்திட, திறன்மிக்க பொதுப் போக்குவரத்து அமைப்பு இன்றியமையாததாகும். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 19,167 ஆக இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவைத் தடங்களின் எண்ணிக்கை, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 20,684 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 1,421.16 கோடி ரூபாய் செலவில் 7,561 புதிய பேருந்துகள் வாங்குவதன் பயனாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் சராசரி வயது 5.67 ஆகக் குறைந்து, அவற்றின் செயல் திறன் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகள் உயர்ந்துள்ளன. 2010-2011 ஆம் ஆண்டில் லிட்டருக்கு 5.25 கிலோமீட்டராக இருந்த எரிபொருள் பயன்பாட்டுத் திறன், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5.30 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. மேலும், விபத்துக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் கிலோமீட்டர் பயணத்திற்கு 0.18 எனக் குறைந்துள்ளது. இது 2000-2001 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உள்ள காலகட்டத்தில் மிகக் குறைவான அளவாகும்.

54. 2012-2013 மற்றும் 2013-2014 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்பட்டதும், அதிகரித்துவரும் சம்பளச் செலவினங்களும், இச்சுமையை பொதுமக்களின் மேல் சுமத்தக் கூடாது என்ற அரசின் முடிவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையை மிகவும் பாதித்துள்ளன. லிட்டருக்கு 51.65 ரூபாய் என்ற தற்போதைய டீசல் விலையிலேயே அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தாம் இயக்கும் ஒவ்வொரு கிலோமீட்டர் பயணத்திற்கும் 4.05 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால், 2012-2013 ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாயும், 2013-2014 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாயும், 2014-2015 ஆம் ஆண்டில் 600 கோடி ரூபாயும் மானியமாக அளித்து, டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை போதிய அளவிற்கு மாநில அரசு ஈடுசெய்துள்ளது. மேலும், இந்நிறுவனங்களின் செயல் மூலதனத் தேவையை (working capital)  நிறைவு செய்ய 2013-2014 ஆம் ஆண்டில் 350 கோடி ரூபாயையும் 2014-2015 ஆம் ஆண்டில் 353 கோடி ரூபாயையும் இந்த அரசு பங்கு மூலதன உதவியாக வழங்கியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாயும், மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக 480 கோடி ரூபாயும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

தொழில் துறை

55. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு நமது நாட்டிலேயே உகந்த இடமாக தமிழகத்தை மாற்றிட இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு புதிய தொழில் கொள்கையும், உயிரி தொழில்நுட்பத்திற்கான கொள்கை, வாகனங்களுக்கும் வாகன உதிரிப்பாகங்களுக்குமான தொழில் கொள்கை போன்ற தனிப்பட்ட தொழில் கொள்கைகளும், பல முற்போக்கான அம்சங்களைக் கொண்டுள்ளன. இவை உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டை உயர்வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வழிசெய்வதோடு, உலகிலேயே தொழில்மயமான பகுதிகளில் ஒன்றாக நமது மாநிலத்தைத் திகழச் செய்யவும் வழிவகை செய்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 31,706 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இவை மட்டுமன்றி, இந்த அரசின் சிறப்பான முயற்சிகளால், ஒற்றைச் சாளர ஒப்புதல் முறை மூலமாக 42 திட்டங்களில் 9,379 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், 17,134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு முதலீட்டுத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு இவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளன. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில், சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்த அரசு நடத்தவுள்ளதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவீர்கள். அனைவருக்கும் பயனளிக்கத்தக்க வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகள், அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நிலைக்கத்தக்க வளர்ச்சி போன்ற தொலைநோக்குத் திட்ட இலக்குகளை விரைவான தொழில்மயமாதல் மூலமாக எட்டிட இம்மாநாடு வழிவகுக்கும்.

56. தொழில் புரிவதற்கான சூழலை எளிமையாக்குவதற்கான நடவடிக்கையாக, பல்வேறு துறைகளில் தேவைப்படும் அனைத்து உரிமங்கள் மற்றும் ஒப்புதல்களையும் பெற, தொழில் முனைவோர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவான ஒரு ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் (Single Window Investor Portal) 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பப்படிவங்களும், வழிமுறைகளும் எளிமையாக்கப்படும். இதனால், வெளிப்படைத்தன்மையுடன் விண்ணப்பங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவை தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய அரசின் இந்த முயற்சி உதவும்.

57. மாநிலத்தில் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, மதுரை-தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கான ஒரு சிறப்புச் சலுகைத் தொகுப்பும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற தனியார் நிதி நிறுவனங்களோடு இணைந்து தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தையும் இந்த வாரியம் அமைக்க உள்ளது. தனியாரிடமிருந்து முதலீடுகளைத் திரட்டி, அரசுத் திட்டங்கள், அரசுத் துறை-தனியார் துறை பங்களிப்புத் திட்டங்கள் மற்றும் சிறப்பு வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் உள்ளிட்ட தனியார்துறை திட்டங்களுக்கும் இந்நிறுவனம் மூலம் கடனுதவி வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

58. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, 63.18 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி தமிழகத்தின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் முப்பது இலட்சம் ரூபாய் வரை 25 சதவீத முதலீட்டு மானியத்தையும், 3 சதவீத அளவிற்கான வட்டி மானியத்தையும் இந்த அரசு வழங்கி வருகிறது. தனியார் தொழில் குழுமங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த அரசு உதவியளித்து வருகிறது. தொழில் முனைவோருக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க பெரிய தொழிற்சாலைகளுக்கென ஏற்படுத்தப்படவுள்ள ஒற்றைச் சாளர முதலீட்டாளர்கள் வளைதளப் பகுதியைப் போன்றே இத்துறைக்கு இத்தகைய வசதியை 2015-2016 ஆம் ஆண்டில் இந்த அரசு ஏற்படுத்தும். 2015-2016 ஆம் ஆண்டில் மூலதன மானியமாக 80 கோடி ரூபாயும், மின்னாக்கி மானியமாக 42 கோடி ரூபாயும், வட்டி மானியமாக 12 கோடி ரூபாயும், புதிய தொழிற்பேட்டைகளுக்கான கட்டமைப்பு நிதியுதவியாக 60 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

59. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட உதவி செய்யக்கூடிய புதிய தொழில் முனைவோர்-தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், படித்த இளைஞர்களிடையே, குறிப்பாக, பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய தொழில்களுக்கான மானியமாக இதுவரை 77.17 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்கான மானியமாக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60. மாநிலத்தில் தொழில் முனைவோர் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு, இந்தியத் தொழில் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளுடன் இணைந்து, தொழில் முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சி மையம் (Entrepreneurship and Business Acceleration Centre) ஒன்றை பொதுத் துறை-தனியார் துறை பங்களிப்பு முறையில் அமைக்க இந்த அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இதற்கான முதற்கட்ட நிதியுதவியாக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் தொடங்கத் தேவையான அறிவுரைகள் (mentorship counseling)) பயிற்சி மற்றும் இதர சேவைகளை இந்த மையம் வழங்கும். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு 365.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு

61. வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தொழிற்பயிற்சிகளை இரண்டு கோடி நபர்களுக்கு அளித்திட தொலைநோக்குத் திட்டம் 2023 உத்தேசித்துள்ளது. இதனையொட்டி தொழில்துறையினர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், மாநிலத்தில் திறன்மிக்க தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக, பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளின் பலனாக, 2014-2015 ஆம் ஆண்டில் 1.24 இலட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இம்முயற்சிகள் வரும் ஆண்டிலும் தொடரும். இதன்மூலம் இரண்டு இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு 100 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

62. கணினி மென்பொருள், வன்பொருள் தொழில்களை மேம்படுத்த மாநிலம் முழுவதும் வலிமையான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்கிட இந்த அரசு உறுதி கொண்டுள்ளது. இந்த அரசு எடுத்த பல்வேறு கொள்கை முன்முயற்சிகளினால், 2010-2011 ஆம் ஆண்டில் 42,210 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி கணிசமாக வளர்ந்து 2013-2014 ஆம் ஆண்டில் 82,445 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கட்டமைப்பில், தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு வசதியும் (Tamil Nadu State Wide Area Network), மாநில தரவு மையமும் ((State Data Centre), பேரிடர் தகவல் மீட்பு மையமும் (Disaster Data Recovery Centre), மேகக் கணினிய கட்டமைப்புகளும் (Cloud computing) அடங்கும். இந்த நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு 82.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் நெசவுத்தொழில்

63. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக நமது மாநிலத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளை கைத்தறி மற்றும் நெசவுத் தொழில் அளித்து வருகிறது. பொங்கல் திருநாளின்போது விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஏழை எளியோரின் தேவைகளை நிறைவு செய்வதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும், விசைத்தறி நெசவாளர்களுக்கும் வேலைவாய்ப்பை இத்திட்டம் அளித்து வருகிறது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 499.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைத்தறித் துணிகளின் விற்பனையை ஊக்குவிப்பதற்கான தள்ளுபடி மானியத் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்த 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 78.45 கோடி ரூபாய் ஒதுக்குpட செய்யப்பட்டுள்ளது.

64. பரமக்குடிக்கு அருகில் உள்ள அச்சங்குளம் நூற்பாலையை 28.02 கோடி ரூபாய் செலவில் மீண்டும் புனரமைத்துச் செயல்படச் செய்தது இந்த அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். முழுமையாக ஆதி திராவிட தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் இந்த ஆலை 4.3.2015 நாளிலிருந்து சோதனை முறையில் செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும், 147.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஆலைகள் தனியார் நூற்பாலைகளுக்கு இணையான திறனுடன் செயல்படும்.

65. திறன்மிக்க நமது கைவினைஞர்களுக்கு பல விருதுகளை வழங்கி இந்த அரசு அவர்களை ஊக்குவித்து வருகிறது. அவர்களது உற்பத்திப் பொருட்கள் உலகமெங்கும் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு கைவினைப் பொருள் மேம்பாட்டு நிறுவனமும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் இணையவழி விற்பனையைத் தொடங்கியுள்ளன. காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதய சங்கங்களுக்கும் வழங்கப்படும் தள்ளுபடி மானியத்திற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வு

66. நான்காவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் தொகை ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,921.77 கோடி ரூபாயும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,564.04 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்தொகை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,422.07 கோடி ரூபாயாகவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,926.32 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியையும் பதினான்காவது மத்திய நிதி ஆணையம் கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 2015-2016 ஆம் ஆண்டில் 1,737.69 கோடி ரூபாய் அளவிற்கும், வரும் ஐந்தாண்டுகளில் மொத்தமாக 17,009.74 கோடி ரூபாய் அளவிலும், நமது மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைக்கும்.
ஊரக வளர்ச்சி

67. குக்கிராமங்களை அலகுகளாகக் கொண்டு வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது ஒரு புதுமையான அணுகுமுறையாகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல், குடிநீர் வழங்கல், தெரு விளக்குகள், மயானங்கள், கிராமப்புறச் சாலைகள் போன்றவை தொடர்பான பணிகளை தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 2,930 கோடி ரூபாய் செலவில் 9,511 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 71,126 குக்கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2015-2016 ஆம் ஆண்டில் 750 கோடி ரூபாய் செலவில் 3,013 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த 8,268 குக்கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் பயனாக 2015-2016 ஆம் ஆண்டின் இறுதியில், 12,524 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 79,394 குக்கிராமங்களிலும் இத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ள சிறப்பான சூழலை இத்திட்டம் ஏற்படுத்தும்.

68. நமது அரசு செயல்படுத்தியுள்ள பாராட்டத்தக்க திட்டங்களுள் முதலமைச்சர் அவர்களின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டமும் ஒன்றாகும். பசுமை எரிசக்தி வசதியோடு கூடிய 60,000 வீடுகளை ஆண்டுதோறும் அமைத்து, கிராமப்புற ஏழைகளின் வீட்டுவசதித் தேவையை இத்திட்டம் நிறைவு செய்கிறது. இதுவரை 4,680 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 60,000 வீடுகளை அமைப்பதற்காக, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, 2014-2015 ஆம் ஆண்டில் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 53,429 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான மாநில அரசின் பங்கு மற்றும் கான்கிரீட் கூரைக்கான கூடுதல் செலவிற்காக 364.38 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிலும் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக 656.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

69. கிராம ஊராட்சி சாலைகளையும், ஊராட்சி ஒன்றிய சாலைகளையும் மேம்படுத்துவதற்கு நமது அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தச் சாலைகளை மேம்படுத்துவதற்கு இந்த அரசு 6,982 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2015-2016 ஆம் ஆண்டிலும் பல்வேறு திட்டங்களின் கீழ் உள்ள நிதிகளை ஒருங்கிணைத்து, 1,400 கோடி ரூபாய் செலவில் 6,000 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

70. சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து 2014-2015 ஆம் ஆண்டில் 12,017 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு 470 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
71. நாட்டிலேயே மிக அதிக அளவாக, இதுவரை 25.15 கோடி மனித வேலை நாட்களை ஏற்படுத்தி, 2014-2015 ஆம் ஆண்டிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தை தொடர்ந்து வகித்து வருகிறது. நடப்பாண்டில் 5,155.46 கோடி ரூபாய் செலவிலான பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டப் பணிகளுக்காக 5,248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

72. அனைவரும் எதிர்நோக்கியுள்ள கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய அரசு கணிசமான நிதியுதவி வழங்கும் என நம்புகிறோம். இந்த அரசு தூய்மை கிராமம் இயக்கத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளதோடு கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செயல்படுத்த ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் நிதியை பகிர்வு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளது. குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் போன்ற அனைத்து திடக்கழிவு மேலாண்மையையும் முக்கிய அம்சங்களாகக் கொண்ட முன்மாதிரி தூய்மை கிராமங்களை உருவாக்கும் ஒரு ஒருங்கிணைந்த திட்டம், சோதனை அடிப்படையில் 2,000 ஊராட்சிகளில் 2015-2016 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும். மேலும், 2015-2016 ஆம் ஆண்டில் கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 15 இலட்சம் வீட்டுக் கழிப்பறைகள் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் கிராமப்புறத் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம்

73. விரைவான நகரமயமாதலால், மாறிவரும் மக்கள்தொகை பரவலுக்கு ஏற்ப நகர்ப்புரக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது. இச்சவாலை சமாளிக்க, கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ், 1,434.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1,084 குடிநீர் வழங்கல் திட்டங்களும், 862.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 74 பாதாளச் சாக்கடைத் திட்டங்களும், 1,929.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3,304 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக தமிழ்நாடு நகர்ப்புரச் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்காக 2015-2016 ஆம் ஆண்டிற்கு 420.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

74. பேரூராட்சிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த, 234 பேரூராட்சிகளில் உள்ள 272 சாலைகளை மேம்படுத்தவும், 26 பேரூராட்சிகளில் உள்ள 29 பாலங்களை அமைக்கவும் தேவையான பணிகள், 2014-2015 ஆம் ஆண்டில் நபார்டு வங்கி நிதியுதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளுக்காக 140.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

75. அனைத்து நகர்ப்புரப் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. ஒரு மாநகராட்சியிலும், 21 நகராட்சிகளிலும், 28 பேரூராட்சிகளிலும் 3,110.98 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 197.34 கோடி ரூபாய் செலவில் 17 பேரூராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தவும், 2,041.61 கோடி ரூபாய் செலவில் ஒரு மாநகராட்சியிலும், 20 நகராட்சிகளிலும், 11 பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

76. தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரங்கள் (Smart Cities) திட்டத்தில் சேர்ப்பதற்கான மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி, இந்த அரசு 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஒரு இலட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள அனைத்து நகரங்களிலும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள தேசிய நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்திற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நகரங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரத்தையும், வேளாங்கண்ணியையும் சேர்த்துள்ளமைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாரம்பரிய நகர மேலாண்மைத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

77. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-ஐஐஐ வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2,212.89 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புர கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியில் 1,101.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பெரும் மழைநீர் வடிகால் பணியும் இத்திட்டத்தில் அடங்கும். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 152 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

78. நிதிநிலை பலவீனமாக உள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் சிறப்பு நிதியம் ஒன்று 2012-2013 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை 143.46 கோடி ரூபாய் செலவில் 93 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்தகைய மேலாண்மைப் பணிகளைச் செயல்படுத்துவதற்காக 133.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

79. திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை எய்திடும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 137.52 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்குறிக்கோளை எய்துவதில் இந்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் உறுதுணையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், நகர்ப்புரங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்கல்

80. அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் போதிய பாதுகாப்பான குடிநீர் வழங்குவது இந்த அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக 1,803.30 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,428.27 கோடி ரூபாய் மதிப்பிலான 1,604 திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி, தேசிய கிராமப்புறக் குடிநீர்த் திட்டத்திற்காக மாநில அரசின் பங்கு உட்பட மொத்தமாக 343 கோடி ரூபாய் வரும் நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகள் திட்டம் முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கு 186.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

81. சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதைக் கருத்தில்கொண்டு, எங்களது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த இராமநாதபுரம் மாவட்டம் குதிரைவாய்மொழியிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தழையிலும் தலா நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட இரண்டு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் 1,947 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இவை 10.25 இலட்சம் மக்களுக்கும் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் பயனளிக்கும். சென்னை மாநகரப் பகுதியில் அதிகரித்துவரும் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய 1,371.86 கோடி ரூபாய் செலவில் நெம்மேலியில் நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப்பணிகள் 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புர வீட்டுவசதி

82. தமிழகத்தில் நகர்ப்புர ஏழைகள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் குறிக்கோளை எய்திட பெரும் முதலீடு தேவைப்படுகிறது. பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைக்கச் செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான 2,293 குடியிருப்புகள் உள்ளிட்ட 10,059 குடியிருப்புகளை 565.92 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் 2,050.72 கோடி ரூபாய் செலவில் 45,473 குடியிருப்புகளைக் கட்டி முடித்துள்ளது.

83. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சர்தார் பட்டேல் நகர்ப்புர வீட்டுவசதி இயக்கம் மாநில அரசின் முயற்சிகளுக்கு கணிசமான அளவிற்கு நிதியுதவி பெற்றுத் தரும் என நம்புகிறேன். அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் இத்திட்டத்தின் கீழ், 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 289.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம்

84. இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரை கடன் மற்றும் பங்கு மூலதன உதவியாக 3,105.82 கோடி ரூபாயை மாநில அரசு அளித்து தன்னுடைய பங்களிப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக 615.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடனாகவும், பங்கு மூலதன உதவியாகவும் ஏற்கனவே அளிக்கவேண்டியுள்ள 1,498.74 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைவில் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மக்கள் நல்வாழ்வு

85. 2010-2011 ஆம் ஆண்டில் 4,395.31 கோடி ரூபாயாக இருந்த மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதியொதுக்கீட்டை, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 8,245.41 கோடி ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. இது மாநில அரசின் மொத்த ஒதுக்கீட்டில் 4.52 சதவீதமாகும். இந்த உயர் ஒதுக்கீடுகளாலும், பல முன்னோடி முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்தியதாலும், மருத்துவக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 24 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு வீதம் 2013-ல் 21 ஆக குறைந்துள்ளது. இந்த குறியீட்டில், பெரிய மாநிலங்களுள் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சாதனைகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் 489.41 கோடி ரூபாயை நமது மாநிலம் மத்திய அரசிடமிருந்து ஊக்கத் தொகையாகப் பெற்றுள்ளது.

86. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அதிக எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 2,110.64 கோடி ரூபாய் செலவில் 10.05 இலட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ், 764.20 கோடி ரூபாய் பெற்று, அதன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குச் செலவிட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கு 781 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 668.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத் திட்டத்திற்கு 50 கோடி ரூபாயும், மகளிர் சுகாதாரத் திட்டத்திற்கு 60.58 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

87. உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சையின் சேவைத் தரத்தை உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் தொற்றுநோய் அல்லாத நோய்த்தடுப்பு அம்சத்தின் கீழ், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்காக 36.75 இலட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்கு 15.9.2015 வரை கால நீட்டிப்பு கிடைத்துள்ளது என்பதை இந்த பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தின் நிறைவுப் பணிகளுக்கு 23.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

88. தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், ஆரம்ப நிலை (primary care), இரண்டாம் நிலை (secondary care) மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் தாய்-சேய் நல சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த சுகாதார இயக்கத்தின் கீழ், 265.56 கோடி ரூபாய் செலவில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 122 சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதாரம் மட்டுமன்றி இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை (Tertiary care) சுகாதார வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசு எப்போதும் உறுதியாக உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, சிறப்பான மருத்துவ வசதிகளை வழங்க, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின், கட்டமைப்புகளை மேம்படுத்த 734.42 கோடி ரூபாயும், உபகரணங்கள் வாங்க 360.51 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, 3,290 கூடுதல் பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், இதர இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலும் 113.51 கோடி ரூபாய்க்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளும் 74.40 கோடி ரூபாய்க்கு தளவாடங்களும் உபகரணங்களும் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் 1,342.67 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தேசிய சுகாதார இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

89. சென்னையில் உள்ள 100 நகர்ப்புர சுகாதார மையங்களும் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 243 மையங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சென்னையில் 20 புதிய நகர்ப்புர சுகாதார மையங்களும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 37 புதிய மையங்களும் 107.95 கோடி ரூபாய் மொத்த செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் நகர்ப்புரப் பகுதிகளில் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவும்.

90. மருத்துவமனைகள் திறம்படச் செயல்படுவதற்கு அவற்றின் மனிதவள மேம்பாடு இன்றியமையாததாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 5,544 மருத்துவர்களையும், 1,374 துணை மருத்துவப் பணியாளர்களையும் இந்த அரசு நியமனம் செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 610 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

91. பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் இந்த அரசு திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்டறியும் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தி, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நோய்க் கண்காணிப்பு அமைப்பை இந்த அரசு வலுப்படுத்தும். பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, இத்தகைய நோய்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும்.

பள்ளிக் கல்வி

92. கடந்த நான்கு ஆண்டுகளில், 182 புதிய தொடக்கப் பள்ளிகளை துவக்கியும், 107 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 810 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 401 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளின் சேர்க்கையிலும், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு 1,36,593 குழந்தைகள் இப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொலைதூரப் பகுதிகளிலும், பழங்குடியினர் பகுதிகளிலும், போக்குவரத்து வசதிகளையும், வழிக்காவலர் வசதிகளையும் அளித்தல் மற்றும் இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிச் சேர்க்கை போன்ற புதுமையான திட்டங்கள் மூலமாக, கல்வி பயிலாமல் இருந்த 46,737 குழந்தைகள் மீண்டும் முறையான கல்வி பயிற்றுவிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

93. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனால் 2010-2011 ஆம் ஆண்டில், முறையே தொடக்கநிலை மற்றும் உயர்நிலையில் 1 : 29 மற்றும் 1 : 35 ஆக இருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், 2014-2015 ஆம் ஆண்டு முறையே 1 : 25 மற்றும் 1 : 22 எனக் குறைந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 88.59 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு 1,429.09 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

94. கழிப்பறை வசதிகள் போதுமான அளவு இல்லாத பள்ளிகள் 2013-2014-ல் கணக்கெடுக்கப்பட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக 11,698 புதிய கழிப்பறைகள் 73.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், பயன்படுத்தாமல் இருந்த 10,776 கழிப்பறைகள் 41.67 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. நமது அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 2,688.97 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் சோதனைக் கூடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற முக்கியக் கட்டமைப்பு வசதிகளை பள்ளிகளில் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. வரும் நிதியாண்டிலும், பல்வேறு நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி, 450.96 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

95. மாணவ மாணவியரின் நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், க்ரேயான்கள், கலர்ப் பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016 ஆம் ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6.62 இலட்சம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

96. இந்த அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 90.28 சதவீதமாக இருந்த உயர்நிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம், 2013-2014 ஆம் ஆண்டில் 91.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேல்நிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதமும், 2013-2014 ஆம் ஆண்டில் 75.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி அளவான 52.21 சதவீதத்தைவிட கணிசமான அளவு அதிகமாகும். அதேபோன்று, 2010-2011 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2014-2015 ஆம் ஆண்டில் மேல்நிலைக் கல்வி மொத்த சேர்க்கையில், ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 21.83 சதவீதத்திலிருந்து 24.07 சதவீதமாகவும், பழங்குடியின மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 1.01 சதவீதத்திலிருந்து 1.03 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

97. இந்த அரசு அறிமுகப்படுத்திய புதுமையான திட்டங்களின் காரணமாக பள்ளிக் கல்வி வளர்ச்சியில் நமது மாநிலம் முன்னிலையில் உள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு 2,090.09 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்கு 816.19 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

உயர் கல்வி

98. புதிய, அரசு பொறியியல் கல்லூரிகளையும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் அமைப்பதற்கான இந்த அரசின் முயற்சிகளின் பயனாக, 2011-2012 ஆம் ஆண்டில் 6,13,164 ஆக இருந்த கல்லூரி இடங்கள், 2014-2015 ஆம் ஆண்டு 7,28,413 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்றே, பலவகைதொழில்நுட்ப கல்விப் பிரிவுகளில் உள்ள இடங்களும் இதே காலகட்டத்தில் 1,72,807–லிருந்து 2,15,652 ஆக உயர்ந்துள்ளன. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ், 2014-2015 ஆம் ஆண்டில் 2,82,948 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு 569.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் மேற்கூறிய ஒருங்கிணைந்த முயற்சிகளால், 2010-2011 ஆம் ஆண்டில் 6,51,807 ஆக இருந்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, 2014-2015 ஆம் ஆண்டு 7,66,393 ஆக உயர்ந்துள்ளது.

99. 2014-2015 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 153.55 கோடி ரூபாய் அளவிற்குக் கணிசமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு இப்பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக 110.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, 2015-2016 ஆம் ஆண்டிற்கு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக 868.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் உயர்கல்வித் துறைக்கு 3,696.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக இந்த அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகள் மாநிலத்தைச் சிறப்பான நிலைக்கு இட்டுச்செல்லும் என நாங்கள் நம்புகிறோம்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்

100. நமது இளைஞர்களின் திறமையை வளர்த்து, விளையாட்டுப் போட்டிகளில் அவர்களது செயல்திறனை உயர்த்துவதற்காக, விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள், விளையாட்டு விடுதிகள், விளையாட்டுக் கருவிகள், தகுதிமிக்க பயிற்சியாளர்கள் போன்ற உலகத்தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட இந்த அரசு முனைந்துள்ளது. 8.09 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சரின் கோப்பையை ஏற்படுத்தியது, 4.5 கோடி ரூபாய் செலவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வலைப்பந்து அரங்கத்தில் உலகத் தரத்திலான புதிய விளையாட்டு வசதிகளை அமைத்தது, 14 மாவட்டங்களில் தலா 1.5 கோடி ரூபாய் செலவில் பன்பயன்பாட்டு உள்விளையாட்டு அரங்கங்களைக் கட்டியது போன்ற பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்துள்ளது. தென்கொரியாவில் இன்சியானில் நடந்த 17 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இங்கிலாந்தில் கிளாஸ்கோவில் நடைபெற்ற 20 வது காமன்வெல்த் போட்டிகளிலும், பதக்கங்கள் பெற்ற நமது மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, முறையே 4.80 கோடி ரூபாய் மற்றும் 2.77 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறைக்காக 149.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா

101. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி, மாநிலத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர இந்த அரசு வழிவகுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தேசிய அளவில் முதல் இடத்தைத் தமிழகம் பெற்றதோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. மருத்துவ மற்றும் நலவாழ்வுச் சுற்றுலாத் துறையிலும் முக்கிய இலக்கிடமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. சுற்றுலாத் தளங்களை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிப்பதற்கான பிரச்சாரத்தின் மூலமாக சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருவதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

102.ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுற்றுலாக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின், முதற்கட்டப்பணிகள் 135 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் இப்பணிகளுக்காக 52.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுலாத் துறைக்கு 183.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை

103.அனைவராலும் வெகுவாக பாராட்டப்படும் அன்னதானத் திட்டம் தற்போது 518 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் 206 கோயில்களுக்கு வெகுவிரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் நிதியுதவியின் கீழ், 250 பழம்பெரும் கோயில்களைப் புதுப்பிப்பதற்கு இந்த அரசு 90 கோடி ரூபாய் வழங்கியது. கிராமப்புறக் கோயில்களுக்குத் தொடர்ந்து உதவும் வகையில், 2014-2015 ஆம் ஆண்டில் 1,006 கிராமக் கோயில்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,006 கோயில்களுக்கும் 10.06 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, நாள்தோறும் ஒருகால பூஜை செய்வதற்கான திட்டத்தின் கீழ் 12,504 கோயில்கள் பயனடைந்துள்ளன. கோயில்களின் பொதுநல நிதியையும், கோயில் தேர்களுக்கான புதுப்பித்தல் நிதியையும் பயன்படுத்தி, 606 கோயில்களும், 123 கோயில் தேர்களும் புதுப்பிக்கப்பட்டன. வரும் ஆண்டிலும் இம்முயற்சிகள் அனைத்தும் தொடரும்.

சமூக நலன்

104. பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர், ஆதரவற்றோர் போன்ற சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நிலையை உயர்த்த, இந்த அரசு எப்போதும் முயன்று வெற்றி கண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் இதுவரை 5,65,800 ஏழைப் பெண்கள் 2,403.08 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெற்றுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டங்களுக்காக 703.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், திருமாங்கல்யம் செய்வதற்கான தங்க நாணயங்களுக்கு 204 கோடி ரூபாய் செலவிடப்படும்.

105.பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில், இதுவரை 2,20,072 பெண் குழந்தைகள் 422.67 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெற்றுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 140.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, 4.03 இலட்சம் வளரிளம் பெண்கள் பயன்பெறத்தக்க வகையில் கிஷோரி சக்தி யோஜனா மற்றும் வளரிளம் பெண்கள் திட்டம் ஆகியவற்றிற்கு 84.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

106.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், 35.36 இலட்சம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, மருத்துவச் சேவைகளை வழங்கி பயனளித்து வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 1,575.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், 54.63 இலட்சம் 62 பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வகை கலவை சாதம் (variety meals) வழங்கப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 1,470.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

107.கடந்த நான்கு ஆண்டுகளில் 821.33 கோடி ரூபாய் செலவில் மாநிலமெங்கும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் மதிய உணவு மையங்கள், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும், மின் இணைப்பு அளிக்கப்பட்டும், பழுதுபார்க்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 24.17 கோடி ரூபாய் செலவில் மிக்சிகள், சமையல் சாதனங்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து மதிய உணவு மையங்களுக்கும், 41,830 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2015-2016 ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள 12,609 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் சமையல் எரிவாயு இணைப்பு வசதிகளை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்புத் திட்ட அமலாக்கம்

108. நமது பெண்களின் மேம்பாட்டிற்காகவும் பொருளாதார வளர்ச்சியில் அவர்களை ஊக்கத்தோடு பங்கெடுக்கச் செய்யவும், இந்த அரசின் முதல் மூன்றாண்டு காலத்தில், விலையில்லா மின்விசிறிகள், மிக்சிகள் மற்றும் கிரைண்டர்கள் கொண்ட 95 இலட்சம் தொகுப்புகள் வழங்கப்பட்டன. 2014-2015 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளில் ஆண்டுதோறும் 45 இலட்சம் தொகுப்புகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

109.இளைஞர்களுக்கு நவீன கணினித் திறனை அளிக்கவும், அவர்களது போட்டித் திறனை மேம்படுத்தவும், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 21.65 இலட்சம் மாணவ மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இந்த முன்னோடித் திட்டத்திற்கு 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

110. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை நிலையை உயர்த்தி, அவர்களுக்கு அதிகாரம் அளித்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு வரையறைகளின்படி நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு 11,274.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். இதுபோன்றே, பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு 657.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும்.

111. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த பெண் குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயிலுவதற்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 55.11 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், 2015-2016 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மத்திய அரசு தனது பங்கான 982.31 கோடி ரூபாயை முழுமையாக அளிக்காத சூழ்நிலையிலும், உயர்கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்த அரசு 2014-2015 ஆம் ஆண்டில் 669.64 கோடி ரூபாய் வழங்கியது. இந்த முயற்சிகளைத் தொடர்ந்திட 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகைத் திட்டங்களுக்கு முறையே 56.37 கோடி ரூபாயும், 674.98 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

112. தற்போது 97,539 மாணவ மாணவியர் தங்கிப் பயிலும் 1,304 ஆதிதிராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ மாணவியர்கள் தங்கிப் பயிலும் 42 பழங்குடியினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் மாணவ மாணவியரின் உணவுச் செலவிற்காக 102.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் கடனுதவியோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் புதிய விடுதிகளைக் கட்டவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டு 52.47 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டடுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், விடுதிகளைப் பராமரிக்கவும் 162.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

113. 2014-2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியது. வரும் நிதியாண்டிலும் பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாய் வழங்கப்படும். ஆதிதிராவிடர்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பணிகளுக்கு உதவிட, மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் 130 கோடி ரூபாய் இந்நிறுவனத்திற்கு வரும் நிதியாண்டில் வழங்கப்படும்.

114. பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை அமைக்கவும், வருவாய் ஈட்டக்கூடிய தொழில்களுக்கு நிதியுதவி வழங்கவும், செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம், 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2015-2016 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளில் விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்கென, இதிலிருந்து 10 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்

115. கடந்த நான்கு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 81,164 மாணவ மாணவியர் பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் 10.36 இலட்சம் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 216.38 கோடி ரூபாய் செலவில், 218 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்காக, 250.49 கோடி ரூபாயும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக 82.69 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக 101.59 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலன்

116. பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களை திறம்படச் செயல்படுத்துவதன் மூலமாக சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் சிறப்பான பயனடைந்து வருகின்றனர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டங்களுக்காக 106.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக 115.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலன்

117. மாற்றுத் திறனாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த மறுவாழ்வுத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகையை 1,500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. இவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்காக பொதுக்கட்டடங்களுக்குத் தடையின்றி சென்று வருவதற்கான ஏற்பாடுகள், கல்வி உதவித்தொகை, படிப்பவர் உதவித்தொகை, எழுதுபவர் உதவித்தொகை ஆகியவற்றை இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 12 கோடி ரூபாய் செலவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 364.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன்

118. மாநிலத்தில் 9 இடங்களில் 7,000 கட்டடத் தொழிலாளர்கள் தங்கும் வகையில் தங்குமிடங்கள், கட்டட வேலை நடைபெறும் இடங்களுக்கே சென்று சிகிச்சை அளிப்பதற்காக 50 நடமாடும் மருத்துவ மையங்கள், தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு 50 அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை 124.71 கோடி ரூபாய் செலவில் அமைத்து இவர்களது நலனில் இந்த அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கணக்கெடுப்பதற்கான ஆய்வை மேற்கொள்ள இந்த அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

119. பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கான நிதியுதவிக்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத் துறைக்காக மொத்தம் 139.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் நலன்

120. அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களின் பயன்களையும் விரிவுபடுத்தி வழங்கியும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கணிசமாக உயர்த்தியும், அவர்கள் கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்குத் தேவையான முழு ஆதரவை இந்த அரசு வழங்கி வருகிறது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த அரசு விரிவுபடுத்தியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இலங்கைத் தமிழர் நலனுக்காக 108.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 -டாக்டர் துரைபெஞ்சமின். drduraibenjamin@yahoo.in