அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட மேல்முறையீட்டு வழக்கில், பெங்களூரு ஐகோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பை வழங்க தடை விதிக்க வேண்டும் என்ற, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில், தனி நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் நடந்தது. இந்த விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்தும், விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான இறுதி விசாரணை 26.03.2015 அன்று நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தொடங்கியது.
க.அன்பழகன் சார்பில் ஆஜரான அந்தியார்ஜூனா, அரசு வக்கீல் பவானிசிங் தனிக்கோர்ட்டில் வாதாடுவதற்கு மட்டுமே நியமிக்கப்பட்டார். அவரையே மேல்முறையீட்டு மனுவின் மீது வாதாடுவதற்கு நியமித்தது உள்நோக்கம் கொண்டது. அவருடைய நியமனம் விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே, அவரை இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எம்.என்.ராவ், பவானிசிங்கை நியமனம் செய்ததில் கர்நாடக அரசுக்கு பங்கு ஏதும் கிடையாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பவானி சிங்கை அரசு வக்கீலாக தமிழக அரசு நியமித்ததற்கு கர்நாடக அரசு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. கர்நாடக அரசு ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். விசாரணை எப்படி போகிறது என்று நீங்கள் அக்கறை ஏதும் காட்டவில்லை என்று கூறினார்கள்.
அதற்கு கர்நாடக அரசு வக்கீல் ராவ், இந்த வழக்கை தமிழகத்துக்கு வெளியில் நடத்துவதற்காக இடம் கொடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றினோம். இதுதவிர இந்த வழக்கு விசாரணையில் கர்நாடக அரசு எந்தவிதமான குறுக்கீட்டிலும் ஈடுபடவில்லை என்றார்.
ஜெ.ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை 3 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைந்து முடிக்கும் பொருட்டு தமிழக அரசு காலஅவகாசத்தைக் கருத்தில் கொண்டு இந்த நியமனத்தை செய்தது. இதில் தமிழக அரசுக்கோ அல்லது பவானிசிங்குக்கோ எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றார். ஏப்ரல் 1–ந் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் அன்பழகன் தரப்பு வக்கீல் விகாஸ்சிங், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை முடிவடைந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பெங்களூரு ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in