அஹிம்சை நெறியை உலகிற்கு உணர்த்திய பகவான் மகாவீரர் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, அன்பு செழித்தோங்கும் என மகாவீர் ஜெயந்தியையொட்டி, சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெ.ஜெயலலிதா இன்று (01.03.2015) வெளியிட்டுள்ள மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும், தமது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
எவரிடமும் விருப்போ, வெறுப்போ கொள்ளாமல், மடமை, அச்சம் ஆகியவற்றை விலக்கி பற்றில்லாது வாழ்பவரே முக்தி பெற்றவர் என்றார்.
பற்றே பல்வகையான துன்பங்களுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது என்றார் பகவான் மகாவீரர். ஆணவம், கோபம், வெறுப்பு, ஏமாற்றம், பழித்தல், பழிவாங்குதல் போன்ற பலவும் பற்றாலே மனிதரைப் பற்றி விடுகின்றன. இப்பற்றே இம்சையின் விதையாகவும், வேராகவும் இருப்பதால், இம்சையை விட்டு அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் பற்றை முற்றிலும் விட்டொழிக்க வேண்டும் எனப் போதித்தார் மகாவீரர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லாமையும் பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை விளக்கி, அஹிம்சை நெறியை உலகிற்கு உணர்த்திய பகவான் மகாவீரரின் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, அன்பு செழித்தோங்கும் .
அறத்தையும், அஹிம்சையையும் இரு கண்களாகப் பாவித்த பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அவருடைய போதனைகளைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை நான் உரிதாக்கிக் கொள்கின்றேன். இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.