நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த மெகா நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது. அந்த வரிசையில், ஒடிசா மாநிலத்தில் தலபிரா 2–வது நிலக்கரி சுரங்கத்தை, தேர்வுக்குழு நிராகரிப்புக்கு பின்னும் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த ஒதுக்கீடு நடந்தபோது, நிலக்கரித் துறை மந்திரி பொறுப்பை வகித்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக், தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்டவர்கள் ஏப்ரல் 8–ந்தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, மன்மோகன் சிங் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் எந்த குற்ற நோக்கத்துடனும் செயல்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு 01.04.2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், அவர்களை நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தற்காலிகமாக ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து சி.பி.ஐ. தனது பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எனவே வரும் 8-ம் தேதி மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in