ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், அவரது நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருக்கும் இருவரின் குடும்பத்தினர் ஆகியோரின் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை (Enforcement Directorate) முடக்கியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-ல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் 2011-ல் புகார் அளித்தார்.
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, அதன் நிறுவனர் சிவசங்கரனுக்கு, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, தனது துணை நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றம் (FIR NO: CBI/ACB22A/11/11) சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரங்கள் இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்தது.
அதனால், குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது.
டில்லி, பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவுபடி, தயாநிதி மாறன், கலாநிதிமாறன் ஆகிய இருவரும் பலமுறை வழக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி டில்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமின் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் மனுவை விசாரித்த, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி, ஓ.பி.சைனி, வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ.,யின் பதிலை அப்போது கோரினார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவர் அண்ணன் கலாநிதி ஆகியோருக்கு சொந்தமான, 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, ஆமை வேகத்தில் செயல்பட்டு, மத்திய அமலாக்கத் துறை (Enforcement Directorate) முடக்கியுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in