தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், மேட்டுப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் நீதிபதி முட்டாசி ஜியாபால் (Muttaci Jeyapaul), இவர் 28.10.2010 முதல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இவர் கடந்த 30.03.2015 திங்கட்கிழமை அன்று காலை, சண்டிகரில் உள்ள சுக்னா ஏரி (Sukhna lake) கரையில், தனது மெய்காப்பாளர் யஷ்பாலுடன், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு பெண்ணின் அபய குரல் கேட்டது. சப்தம் வந்த பகுதியை நோக்கி நீதிபதி முட்டாசி ஜியாபால் ஓடினார். அப்போது ஏரியில் பெண் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்துள்ளார்.
சற்றும் தாமதிக்காமல், யாரையும் உதவிக்கு அழைக்காமல், நீதிபதி முட்டாசி ஜியாபால் உடனடியாக ஏரியில் குதித்தார். இதைப் பார்த்த அவருடைய மெய்காப்பாளர் யஷ்பாலும் ஏரியில் குதித்தார். சில நிமிடங்களில் அப்பெண்ணை தண்ணீரில் இருந்து மீட்டு, ஏரி கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பெண் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமை காரணமாக உயர்க்கல்வியை தொடர முடியாத வருத்ததில், அப்பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனை அறிந்த நீதிபதி முட்டாசி ஜியாபால், அப் பெண்ணின் உயர் கல்விக்கு பணம் அளித்து உதவியுள்ளார்.
மேலும், அப்பெண்ணை காப்பாற்ற உதவிய, தனது மெய்க்காப்பாளர் யஷ்பாலுக்கு பதவி உயர்வுக்கு பரிந்துரைத்து மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனது உயிரை பற்றி கவலைப்படாமல், தான் ஒரு நீதிபதி என்பதையும் மறந்து, ஏரியில் குதித்து பெண்ணை காப்பாற்றிய நீதிபதி முட்டாசி ஜியாபால் அவர்களின், மனித நேயம், உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in