நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
அதில், டெல்லி முதல்–மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்–மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அசுதோஷ், சஞ்சய் சிங் ஆகியோர் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினர்.
அரவிந்த் கெஜ்ரிவால் பேச இருந்தபோது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயி, திடீரென ஒரு துண்டு காகிதத்தை வீசி விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
விவசாயிகளின் நிலையை விளக்கும் வகையில் அவர் கோஷங்களை எழுப்பினார். அங்கிருந்த ஒரு வேப்பமரத்தில் ஏறிய அவர், தனது துண்டின் ஒரு முனையை தனது கழுத்திலும், மற்றொரு முனையை ஒரு மரக்கிளையிலும் கட்டினார்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், அவரை கீழே இறங்குமாறு கூச்சல் போட்டனர்.
அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த மூத்த தலைவர் குமார் விஸ்வாசும், அவரை கீழே இறங்குமாறு கூறினார். அவரை காப்பாற்றுமாறு போலீசாரிடம் வேண்டினார். ஆனால், போலிசார் அதை கண்டு கொள்ளவில்லை.
இரண்டு தொண்டர்கள், மரத்தில் ஏறி, விவசாயியின் தற்கொலையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அவர் தூக்கில் தொங்கி விட்டார். மேலே ஏறிய தொண்டர்கள், முடிச்சை அவிழ்க்க முயன்றபோது, மரக்கிளை முறிந்து விழுந்தது.
ஆம் ஆத்மி தொண்டர்கள், அந்த விவசாயியை மீட்டு, டெல்லி ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து அதிர்ச்சி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், ‘போலீசாருக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டும்‘ என்று கூறினார். கூட்டம் முடிவடைந்த பிறகு, தானும், மணீஷ் சிசோடியாவும் ஆஸ்பத்திரிக்கு செல்லப் போவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் விவசாயியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். பிறகு, விவசாயியின் உடல், பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுக்கூட்டம் முடிவடைந்த பிறகு, ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றத்துக்கு பேரணியாக செல்ல ஆம் ஆத்மி திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்த பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர்.
மேலும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால், 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். எனவே, பாராளுமன்றம் நோக்கி நடத்த இருந்த பேரணியை ஆம் ஆத்மி ரத்து செய்தது.
தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் கஜேந்திர சிங் ஆகும். அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். துயரத்தில் விவசாயி தனது வாழ்க்கையை முடித்து கொண்டது மிக வருத்தமான சம்பவம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற வார்த்தைகள் கிடையாது இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்
விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். விசாரணை அறிக்கை வந்த பிறகு தான் அரசு மேல் நடவடிகை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் பாசி நேரடியாக விசாரணை நடத்துவார் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டணைச் சட்டம் 304-A (முரட்டுத்தனமான அசட்டையான செய்கையினால் மரணம்) என்பது உள்பட 3 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கஜேந்திரசிங்கின் சொந்த ஊர், ராஜஸ்தான் மாநிலத்தில் தவுசா மாவட்டத்தில் உள்ள ஜம்வாரா நங்கல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். 40 வயதாகும் இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
ஒரு முதல்வரின் கண் எதிரில் நடைப்பெற்ற தற்கொலையை தடுப்பதற்கு வக்கு இல்லாமல், கை கட்டி வேடிக்கைப் பார்த்த டெல்லி காவல்துறையை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in