உலகெங்கும் வாழும் உழைப்பாளர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா மே தின வாழ்த்து!

JJ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ‘மே தின’ வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம், ‘மே தின’ நன்னாளில், உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயபூர்வமான ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

may day

உடல் உழைப்பு என்பதனையே மூலதனமாகக் கொண்டு, அந்த உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியத்தினையே தம் வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி, உழைப்பால் வாழ்ந்தனரா? உழைப்புக்காகவே வாழ்ந்தனரா? என்று ஐயப்படும் அளவுக்கு, உழைப்பை உறிஞ்சிப் பிழைக்கும் முதலாளிகளின் பிடியில் சிக்கி, உயிர் வாழ்கின்ற ஒரு உரிமை தவிர, பெரும்பாலான பிற உரிமைகள் மறுக்கப்பட்டு, அடங்கி, ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள், ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பாளரின் உரிமையையும், உடல் உழைப்பின் மேன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உயர் தினமாகவும் ‘மே தின’ திருநாள் விளங்குவதாக ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது, அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், “உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என்று உழைப்பாளர்களின் புகழை உயர்த்தி பாடியுள்ளார் என்றும் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

வியர்வை சிந்த உழைப்பது என்பது கடினமானதாகக் கருதப்பட்டாலும், அதன் பலன்கள் இனிமையானவை என்பதை உணர்ந்து, உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் தமது நெஞ்சார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்வதாக தமது ‘மே தின’ வாழ்த்துச் செய்தியில் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.