கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி நடிகர் சல்மான் சலீம்கான், மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான் சலீம்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்னர் விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் மறுவிசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் இன்று 06.05.2015 புதன்கிழமை தீர்ப்பு கூறபட்டது. இன்று காலை 11.05 மணிக்கு வக்கீலுடன் சல்மான் சலீம்கான் கோர்ட்டுக்கு வந்தார். அவரது குடும்பத்தினரும் கோர்ட்டுக்கு வந்திருந்தினர்.
சரியாக காலை 11.15 மணிக்கு நீதிபதி தேஷ் பாண்டே தீர்ப்பை வாசித்தார். சல்மான் சலீம்கான் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இவ்வாறு நீதிபதி கூறியபோது, சல்மான் சலீம்கான் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
நீதிபதி அவரைப் பார்த்து, ‘‘தீர்ப்பு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’’ என்று கேட்டார். அதற்கு சல்மான் சலீம்கான் ‘‘நான் நிரபராதி. நான் கார் ஓட்டவே இல்லை’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் சலீம் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சல்மான் சலீம்கான் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சல்மான் சலீம்கானுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in