எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முகமது மொர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
2011-ம் ஆண்டு எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக Hosni Mubarak என்பவர் இருந்தபோது, வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முகமது மொர்ஸி உள்பட ஏராளமான போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், சிறைக்கு சென்ற இரண்டே நாளில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு முகமது மொர்ஸியும், அவரது ஆதரவாளர்களும் தப்பினர்.
இந்த கலவரத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளும் தப்பினர்.
இதன் பின்னர், பல்வேறு போராட்டங்களை நடத்தி 2012-ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி முகமது மொர்ஸி முதன் முதலாக எகிப்தின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பதவி ஏற்ற ஓராண்டிற்குள் மீண்டும் கலவரம் வெடித்ததால், ராணுவ தளபதியான Abdul Fattah al-Sisi, முகமதுவை ஆட்சியிலிருந்து நீக்கி சிறையில் அடைத்தார்.
2012-ம் ஆண்டு ஆட்சியிலிருந்தபோது ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கலவரத்தை தூண்டிய குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், அப்போது சிறையிலிருந்து தப்பிய குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கவில்லை.
இன்று(16.05.15) வெளியாகியுள்ள அந்த தீர்ப்பில் 2011-ம் ஆண்டு சிறை கலவரத்தை தூண்டியது, சிறையிலிருந்து தப்பியது உள்ளிட்ட குற்றங்களுக்காக முகமது மொர்ஸிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தி நாட்டின் உயரிய இஸ்லாமிய மத அமைப்பான Grand Mufti, இந்த மரண தண்டனை தீர்ப்பிற்கு ஆதரவு அளித்தால் தான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.
எனவே, தீர்ப்பு குறித்த அனுமதி ஜீன் 2-ம் தேதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்தி நாட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அவர்களது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ஆர்.மார்ஷல்.