தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10,60,866 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்காண முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டார்.
இதில், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
இதில், ஏற்காடு சேகர்ட் ஹார்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதிய, தேனியை சேர்ந்த சேர்மன் அய்யனார் மற்றும் காயத்ரி ஆகியோரின் மகள் த்ரிநேத்ரா 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து மாணவி த்ரிநேத்ரா கூறியதாவது:
நான் 500 மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து தேர்வெழுதினேன். ஆனால், 498 மதிப்பெண் எடுத்துள்ளேன். இது எனக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
நான் இத்தகைய மதிப்பெண்கள் எடுக்க துணையாக இருந்த எனது பள்ளி ஆசிரியர்கள், அருட்சகோதிரிகள், பெற்றோர்களுக்கு எனது நன்றியை கூறுகிறேன்.
மேலும், நான் நிருபர் ஆவதற்காக ஜெர்னலிஸ்ட்ஸ் படிப்பை தேர்வு செய்து படிக்க உள்ளேன். நிருபராக பணியாற்றி சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வேன். இவ்வாறு மாணவி த்ரிநேத்ரா கூறினார்.
-நவீன் குமார்.