ஒரு காலத்தில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்தியவர், பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர், வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடித்தவர், “பொதுநலச்சேவகர்” என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டிராபிக் ராமசாமி என்கிற கே.ஆர். ராமசாமியின் நேர்மையின் மீது, சமீபகாலமாக பலத்த சந்தேகமும், அவரது நடவடிக்கையின் மீது மிக பெரிய விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை நடுநிலையோடு செயல்பட்டு வந்த டிராபிக் ராமசாமி, சமீபகாலமாக கூலிக்காக வேலை செய்யும் ஆசாமியாக செயல்பட்டு வருகிறார்.
ஜெ.ஜெயலலிதாவிற்கு எதிராக மட்டுமே செயல்படும் நபராக டிராபிக் ராமசாமி மாற்றப்பட்டிருக்கிறார். அவரை மாற்றிய பெருமை திமுக தலைமைக்குதான் சொந்தம்.
ஊழல் மிக்க ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிப்பதற்காகவே, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக என்னை பொதுவேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளதாகவும், டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
தி.மு.க. ஊழல் இல்லாத கட்சி என்று டிராபிக் ராமசாமி சொல்கிறார். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? அந்த அளவிற்கு டிராபிக் ராமசாமியின் நேர்மை தரம் தாழ்ந்து விட்டது. நித்தியானந்தாவும், சுவாமி விவேகானந்தரும் ஒன்று என்று கூறிய டிராபிக் ராமசாமியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?!
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது “அழுக்கைப் போக்க சோப்பு, ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு” என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in