நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டையில் இருந்து பிரதீபன், செந்தமிழ், நவீன், முருகேசன், இன்பராஜ், தீன தயாளன் ஆகிய 7 இளைஞர்கள் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் காலை முதல் ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு மதியம் இங்குள்ள கிளியூர் நீர்விழ்ச்சியில் குளித்து விளையாடியுள்ளனர்.
இதில் பிரதீபன் (வயது18) என்பவர் மட்டும் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு செல்வதாக சக தோழர்களிடம் சவால் விட்டு விட்டு, நீர்வீழ்ச்சியின் 30 அடி உயர உச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பாசியில் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்சில், ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரதீபனை கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளனர். பின் பிரதீபன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நீர் வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் ஆபத்தான நிலையிலேயே காணப்படுகிறது. பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி, மனித உயிர்களை பாதுக்காக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கிருந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
-நவீன் குமார்.