பணபலம் மற்றும் ரவுடி அரசியல் துணையோடு சாட்சியங்களையும், நீதியையும் விலைக்கு வாங்கியதன் மூலம், சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயேந்திரர் மற்றும் அனைவரும் விடுதலை ஆனார்கள்.
உண்மையை சொல்ல முயற்சித்தால், உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைச்சிப்புடுவேன். சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என்று ஜெயேந்திரர் மிரட்டுகிறார் என அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் மனு கொடுத்துள்ளார்.
ரவிசுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில், ”காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் 26.12.2004 அன்று நான் கைது செய்யப்பட்டேன். இரு வழக்கிலும் நான் அப்ரூவராக மாறினேன்.
நான் அப்ரூவராக வாக்குமூலம் அளித்ததால் அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் அந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவருக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் அனைவரும் தண்டனைக்கு உள்ளாகும் நிலையும் எழுந்தது.
எனவே, எனக்கும், எனது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து, அரசு என்னை உரிய பாதுகாப்புடன் ஜெயிலில் வைத்திருந்தது.
ஆனால், சிறைத்துறையின் அப்போதைய அதிகாரி ராமச்சந்திரனின் (சிறைத்துறையின் முன்னாள் டி.ஐ.ஜி.) மூலமாக அப்பு, கதிரவன் (இரண்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்) ஆகியோர் என்னை மிரட்டினர். அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டு வந்தனர். அவர்களின் மிரட்டலால் நான் பிறழ் சாட்சியாக மாறிவிட்டேன்.
மேலும், பல்வேறு உத்திகளைக் கையாண்டு பணபலம் மற்றும் ரவுடி அரசியல் துணையோடு சாட்சியங்களையும், நீதியையும் விலைக்கு வாங்கியதன் மூலம், சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை ஆனார்கள்.
இந்த உண்மையை சி.பி.சி.ஐ.டி. (ஆடிட்டர் வழக்கின் விசாரணை முகமை) மூலமாக நான் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த எனக்கு ராதாகிருஷ்ணன் வழக்கில் 18.12.2013 அன்று உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது.
நான் வெளியே வந்த பிறகும், ஜெயேந்திரரின் உத்தரவின் பேரில் அப்பு என்னை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அப்புவும், கதிரவனும் இறந்துவிட்டனர். எனவே, நான் சற்று சுதந்திரமாக இருக்கிறேன்.
ஆனாலும், பிறழ் சாட்சி சொல்லி உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விட்ட எனது செயலை, எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இரவும்,பகலும் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஆதலால், நான் வெகுவாக மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இந்நிலையில், ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் 08.06.2015 அன்று நீதிமன்றத்தில் சந்தித்து, நடந்த உண்மைகளையெல்லாம் கூறுவதற்கான ஆலோசனையைக் கேட்டேன். அதற்கான மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தேன்.
இதை ஜெயேந்திரரின் வழக்கறிஞர்களும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சிமடத்தைச் சேர்ந்த சுந்தரேசய்யரும் பார்த்தனர். சிறிது நேரத்தில் சுந்தரேசய்யர் என்னை தனியாக அழைத்தார்.
‘‘பெரியவா இன்றைக்கு வரச்சொன்னார். சாயங்காலம் வந்துவிட்டுப் போ’’ என்றார்.
மாலையில் ஜெயேந்திரரை சந்தித்தேன். அப்போது, ஜெயேந்திரர் என்னிடம், “என்ன மறுபடியும் எனக்கெதிராக சாட்சி சொல்லப்போகிறாயா? உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைச்சிப்புடுவேன். சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்’’ என்று மிரட்டினார்.
அங்கிருந்த சுந்தரேசய்யர் என்னைப் பார்த்து, “நீ பெரியவாவை பகைச்சிண்டேன்னா இந்தியாவின் எந்த மூலையிலும் உயிரோடு வாழ முடியாது. மத்திய அரசுக்கே ஆலோசகராக அவர் இருப்பது உனக்குத் தெரியாதா?’’ என எச்சரித்தார்.
காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றும் கண்ணன் என்ற மடத்துக் கண்ணன் சிறிது நேரத்தில் வந்தார். ‘‘பெரியவாளுக்கு எதிராக ஏதாவது செய்தால் நீ காணாமல் போயிடுவாய். சிறையில் டி.ஐ.ஜி.யாக இருந்ததால் ராமச்சந்திரனுக்கு மாநிலத்தில் உள்ள அத்தனை ரவுடிகளும் தெரியும். பக்குவமா நடந்துகொள்’’ என்று எச்சரித்தார்.
இந்த வழக்குக்காக பெரியவாவுக்கு வேலூர் சிறையில் ராமச்சந்திரன் செய்த உதவிகளை கண்ணன் மேற்கோள் காட்டினார். ராமச்சந்திரன் தற்போது காஞ்சி மடத்தின் பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர முடிகிறது.
என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று கூட இவர்களால் தள்ளப்படுகிறேன். எனவே, ஜெயேந்திரர் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயேந்திரர், ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் முக்கிய காரணம் என்பதையும் அதற்கு சுந்தரேசய்யர் தொடர்புடையவர் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
முக்கிய சாட்சியான என்னை கலைத்ததோடு இல்லாமல், பலசாட்சிகளை இவர்கள் கலைத்துள்ளனர். ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் மீதமுள்ள சாட்சிகளையும் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு சம்பந்தமான பல சாட்சிகள், தடயங்களை அழித்து, மீதியை அழிக்க முயற்சித்து வருகிற ஜெயேந்திரர், சுந்தரேசய்யர் ஆகியோருக்கு வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்கு தொடர்புடைய சிலர் என்னை பின்தொடர்ந்து கண்காணிக்கின்றனர் என்று, தனது மனுவில் ரவிசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து விசாரித்தவர் சக்திவேலு.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தபோது தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று விட்ட சக்திவேலு, சென்னை ஐகோர்ட்டில் 2011 ஆண்டு மார்ச் மாதம் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவின் விபரம் :
சங்கர ராமன் கொலை வழக்கில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்தேன். அவற்றை பதிவும் செய்தேன். ஆயிரக்கணக்கான ஆவணங்களை சேகரித்தேன். 24 பேரை கைது செய்தோம். 40 சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் பெற்றோம். சாட்சிகள் தானாக முன் வந்து வாக்கு மூலம் அளித்தனர். இவர்களில் ரவிசுப்ரமணியம், அப்ரூவராக மாறினார்.
ஆனால், இப்போது சாட்சிகள் பலர், பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். அப்ரூவரான ரவிசுப்ரமணியமும், பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். இவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறினாலும், மாஜிஸ்திரேட் பதிவு செய்த வாக்குமூலம், அரசு தரப்புக்கு உதவியாக இருக்கும். எனவே, அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்பில்லை. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். எனது உதவியை அரசு தரப்பு பெறவில்லை.
அப்ரூவர் ஒருவர் பிறழ் சாட்சியாக மாறினால், குற்றவியல் நடைமுறை சட்டப்படி பொய் சாட்சியம் அளித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்ரூவரான ரவிசுப்ரமணியமும், பிறழ் சாட்சியாக மாறியுள்ளதால், பொய் சாட்சியம் அளித்ததற்காக, அவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், போலீஸ் தரப்பும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சேர்ந்து கொண்டு செயல்படுவதால் அந்த நடிவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இவ்வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி என்கிற முறையில், நானும் கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்க வேண்டும். வழக்கு டைரி அடிப்படையில்தான் இந்த வாக்குமூலம் அளிக்கப்படவேண்டும்.
சிபிசிஐடி டி.எஸ்.பி.,யிடம் வழக்கு டைரியை அளிக்குமாறு கேட்டேன். அதை அளிக்க அவர் மறுத்து விட்டார். பிறழ் சாட்சியாக நான் கருதப்படுவேன் என்றும், வழக்கு முடிக்கப்படும் என்றும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை நியாயமாக நடத்த வேண்டும் என போலீஸ் தரப்பு உண்மையிலேயே விரும்பினால்,கோர்ட்டில் ஆஜராகி நான் வாக்குமூலம் அளிக்கத் தயார். ஆனால், அது சட்டபூர்வமாக இருக்க வேண்டும்.
நான் சாட்சி அளிப்பதற்கு முன், பிறழ் சாட்சிகளாக மாறியவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் சாட்சி அளித்த ரவிசுப்ரமணியம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பிறழ் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க கோரி மனு அனுப்பினேன். வரும் 23-ம் தேதி சாட்சியம் அளிக்க வருமாறு, புதுச்சேரி கோர்ட்டில் இருந்து எனக்கு சம்மன் வந்துள்ளது.
புதுச்சேரி கோர்ட்டில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். பிறழ் சாட்சியாக மாறிய அப்ரூவர் ரவிசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்கவும், பிறழ் சாட்சிகளை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். அதன் பின், என்னை சாட்சியாக விசாரிக்க வேண்டும்.
தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று விட்ட சக்திவேலு தனது மனுவில் இவ்வாறு கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, சக்திவேலு மனுவை அப்போது தள்ளுபடி செய்தார்.
ஆனால், சக்திவேலுவின் வாக்கு மூலம் இப்போது தீர்க்கத் தரிசனமாக நடந்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in