வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக “ஹெல்மெட்” அணிய வேண்டும் என 08.06.2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த ஒரு வாகன விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பழைய கட்டிடங்களை இடிக்கும் ஒப்பந்தக்காரர் ஒருவர், மரணம் அடைந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், அவரது வாரிசுகளுக்கு 12 லட்சத்து 23 ஆயிரத்து 100 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு வாகன விபத்து முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டது.
இந்த இழப்பீட்டு தொகை போதாது என, விபத்தில் இறந்தவரின் வாரிசுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், இழப்பீட்டு தொகையை 20 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டார். மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதால்தான், இதுபோன்ற விபத்து மரணங்கள் அதிகரித்து வருகின்றன என குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், வரும் ஜூலை மாதம் முதல் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வரும் 18-ம் தேதிக்குள் அனைத்து ஊடகங்கள் மூலமாகவும், அரசு விளம்பரம் செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகனங்களை பிடித்து, அவ்வாகனங்களின் உரிமச்சான்றிதழ், மற்றும் வாகன உரிமையாளர்களின் ஓட்டுனர் உரிமத்தை முடக்கி வைக்கலாம்.
புதிய ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை அந்நபர்கள் காட்டிய பின்னர், அவற்றை விடுவிக்கலாம் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும், காவல் துறையின் சார்பில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை ஓர முகாம்கள் அமைக்கப்பட்டு “ஹெல்மட்” அணிவதால் ஏற்படும் பாதுக்காப்பு நன்மைகள் குறித்து போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்திற்கு முக்கிய காரணங்கள்:
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, கண்மூடித்தனமாக மின்னல் வேகத்தில் செல்லும் தண்ணீர் மற்றும் மணல் லாரிகள்.. பணத்தாசையின் காரணமாகவும், வாகன உரிமையாளர்களின் வற்புறுத்தலின் காரணமாகவும், பல நாட்கள் ஓய்வில்லாமல் கண்விழித்து வாகனம் ஓட்டுவது, வாகனத்தை உரிய காலத்தில் பராமரிக்காமல், காலாவாதியான நாட்களுக்கு பிறகும், சாலையில் இயக்குவது, சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் ஏற்படும் வாகன மோதல்கள்… இது போன்ற காரணங்களால்தான் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள் “ஹெல்மட்” அணிவது அவசியம்தான். ஆனால், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும் நபர்களை சாலையில் கொஞ்சம் உற்று கவனியுங்கள், செவ்வாய் கிரகத்திற்கு செல்பவர்களை போல செல்கிறார்கள். உண்மையிலுமே சாலை ஓரத்தில் நடந்து செல்பவர்கள்தான் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
“ஹெல்மெட்” சமூக விரோதிகளுக்கும், குற்ற சம்பவங்களில் ஈடுப்படுபவர்களுக்கும் தப்பித்து செல்வதற்கு, இது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்துவிடும்.
தங்க சங்கிலி (செயின்) அறுப்பவர்கள், கொலை மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுப்படுபவர்கள், காவல்துறையின் பார்வையிலிருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கையில் ஈடுப்பட்டு வரும் குற்றவாளிகள்… ஆகியோர், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது “ஹெல்மட்” அணிந்து கொண்டுதான் செல்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. எனவே, தமிழக காவல்துறை மிகவும் விழிப்பாக இருப்பது நல்லது.
ஏனென்றால், ஒருவர் “ஹெல்மட்” அணியாமல் விபத்துக்கு உள்ளானால், அது தனிநபர் கவனக்குறைவாகதான் கருதப்படும். ஆனால், “ஹெல்மட்” அணிந்து ஒருவர் குற்றச் சம்பவங்களில் ஈடுப்பட்டால், அது ஒரு மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையாக ஆகிவிடும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் உயிர் எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட ஒட்டு மொத்த மக்களின் சமூக பாதுக்காப்பு மிக முக்கியம். இதையும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in