டி.வி. டுடே நெட் ஒர்க் (TV Today Network) நிறுவனத்திற்கு Aaj Tak, NDTV, Headlines Today, Business Today, Tez … ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் ஏராளமான செய்தி சேனல்கள் மற்றும் இந்தியா டுடே உட்பட செய்தி புலனாய்வு இதழ்கள் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் டி.வி. டுடே நெட் ஒர்க் நிறுவனத்தின் செய்தி சேனல் செய்தியாளராக அக்ஷ்ய் சிங் என்பவர் பணியாற்றி வந்தார்.
மத்திய பிரதேசத்தில் நடந்த கல்வி துறை ஊழலில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.
இந்த ஊழல் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினரை சந்தித்து அக்ஷ்ய் சிங் பேட்டி எடுத்தார். பேட்டி எடுத்த சில மணி நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் முன்பே அக்ஷ்ய் சிங் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் மருத்துவமனை டீனும் மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதனால், மத்திய பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மர்மமான முறையில் உயிர் இழந்த மத்திய பிரதேச பத்திரிகையாளர் அக்ஷ்ய் சிங் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டது.
இவரது உடலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவருடன் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, காங்கிரஸ் மூத்த நிர்வாகி அஜய்மக்கான் ஆகியோரும் உடன் சென்றனர்.
மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரியாக சிவராஜ்சிங் சவுகான் இருந்து வருகிறார்.
மத்திய பிரதேசத்தில் கல்வித்துறை ஊழல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற போது மர்மமான முறையில் பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ள விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.