அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், `கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் நிற்க முடியும்?’ என்ற மானுடத்தின் தொன்று தொட்ட நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் எல்லா வகையான சோதனைகளையும் வென்று காட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் முழு அர்ப்பணிப்போடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டில் வெற்றி நடை போட்டு வருகிறது.
`நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்’ என்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் கொள்கை முழக்கத்திற்கு ஏற்ப, தமிழக மக்களுக்காக உயர்ந்த லட்சியங்களோடு அ.இ.அ.தி.மு.க. அரசு பல்வேறு சரித்திர சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தத் திட்டங்கள் அடைந்திருக்கும் வெற்றியின் காரணமாக தேசிய அளவிலும், உலக அரங்கிலும் பல பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் தமது தலைமையிலான அரசு பெற்று வருகிறது.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மின் தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறது. 2011ஆம் ஆண்டு, சட்டமன்றப் பொதுத் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த முழுமுதல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமிதம் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு உண்டு.
எண்ணற்ற சாதனைகளை தமிழக மக்களுக்கு தமது தலைமையிலான கழக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
அதன்படி, 24 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை மற்றும் 21 கிலோ மீட்டர் மேம்பாதை என மொத்தம் 45 கிலோ மீட்டர் வழித் தடத்தில் அமைக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயக்கம்.
600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை -III, வட சென்னை அனல் மின் நிலையம் நிலை -II இல், 600 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூட்டு முயற்சியின் மூலம் வல்லூரில் 500 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி துவக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய திட்டங்களின் மூலமும், மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் காரணமாகவும் மொத்தம் 5,346.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம்.
3,330 மெகாவாட் மின்சாரம் நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்து.
தமிழ் நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012-ன்படி மொத்தம் 1,084 மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய 32 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.
ஏழை எளியோர் வயிறார உண்ண 298 அம்மா உணவகங்கள்.
2,847 கோடியே 22 லட்சம் ரூபாய் 21 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்.
805 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம்.
31,706 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 1 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு.
17,134 கோடி ரூபாய் முதலீட்டில் 7 புதிய தொழிற்சாலைகளுக்கு தொகுப்பு உதவி வழங்கும் அரசு ஆணை. 17,901 நபர்களுக்கு வேலை வாய்ப்பு.
1,500 கோடி ரூபாய் செலவில் திருச்சிராப்பள்ளி மொண்டிப்பட்டியில் தமிழ் நாடு செய்தித் தாள் மற்றும் காகித நிறுவனத்தின் புதிய காகித அட்டை ஆலை.
542 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் டான்செம் நிறுவனத்தின் அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கம்.
`அம்மா உப்பு’ திட்டத்தின் மூலமாக 3,706 டன் உப்பு 2 கோடியே 66 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை.
`அம்மா சிமெண்ட்’ வழங்கும் திட்டம் மூலம் மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் 2 லட்சத்து 80 ஆயிரம் டன் அம்மா சிமெண்ட் விற்பனை.
ஒரு கோடியே 69 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் குடும்ப அட்டைதார்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி.
19 லட்சத்து 2 ஆயிரம் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ விலையில்லா அரிசி.
உணவு தானியம் மற்றும் பயறு உற்பத்தி சாதனைக்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள்.
122.86 லட்சம் மெட்ரிக் டன் என உணவு தானிய உற்பத்தியில் சாதனை, உரிய காலத்தில் பயிர்க் கடன்களைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன், 1,214 கோடியே 22 லட்சம் ரூபாய் வட்டி மானியம்.
239 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 38 புதிய பல்கலைக்கழக உறுப்பு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.
128 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீரங்கத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம். 229 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள். 339 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் 4 அரசுப் பொறியியல் கல்லூரிகள். 79 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் நாவலூர் குட்டப்பட்டுவில் தேசிய சட்டப் பள்ளி, சட்டக் கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பு.
தமிழ்நாடு காவல் சிறப்பு இளைஞர் படையில் 10,099 பேர் பணி நியமனம்.
“உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் மேலக்கோட்டையூரில் 456 கோடி ரூபாய் செலவில் 2,673 வீடுகள்.
28 கோடி ரூபாய் செலவில் தீயணைப்புப் பணியாளர்களுக்கு முழு தீப்பாதுகாப்பு தற்காப்பு உடைகள்.
மறைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர் மற்றும் நியமனதாரர்களுக்கான நிதி உதவி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு.
2,497 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் 5 லட்சத்து 79 ஆயிரம் படித்த ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கத்துடன் திருமண நிதியுதவி.
மாற்றுத் திறனாளிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு மாத பராமரிப்பு உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்வு. 550 கோடி ரூபாய் செலவில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பயன். 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட 1,800 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்திட 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் 31 நகரும் சிகிச்சை வாகனங்களின் சேவை, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச வயது வரம்பு 45 லிருந்து 18 ஆக குறைப்பு.
1,354 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 7,153 புதிய பேருந்துகள் வாங்க ஆணை – 4,862 புதிய பேருந்துகள் இயக்கம், 79 லட்சத்து 92 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள். பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் 10 ரூபாய்க்கு “அம்மா குடிநீர்”.
வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தி சமூக நீதி நிலை நிறுத்தம்.
உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாயாக உயர்வு, 2,600 நபர்கள் பயன். 1,220 கிறிஸ்தவர்கள் ஜெருருலம் புனிதப் பயணம் மேற்கொள்ள 2 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதியுதவி.
75,000 மாணவ, மாணவியருக்கு படிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணங்கள் 16 கோடியே 44 லட்சம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்பு.
நான்கு ஆண்டுகளாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய வரவு செலவுத் திட்டம், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
ஓய்வூதியதாரர்களின் வாரிசுகளான திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம்.
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 2,281 கோடியே 77 லட்சம் ரூபாய் வறட்சி நிவாரணம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2,831 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதியுதவி.
1,261 படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க 606 கோடியே 54 லட்சம் ரூபாய் கடன் உதவி, 77 கோடியே 17 லட்சம் ரூபாய் மானியம், இயந்திரத் தளவாடங்கள் மீதான முதலீட்டு மானியம் 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்வு, 5,930 குறு, சிறு தொழில் முனைவோருக்கு 250 கோடி ரூபாய் மானியம்.
ஆண்டு ஒன்றுக்கு 120 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரி முற்றிலும் நீக்கம்.
வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருள்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 87 கோடி ரூபாய் மதிப்புக் கூட்டு வரி விலக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள்.
முல்லைப் பெரியாறு அணையில், தமிழ் நாடு, முதற்கட்டமாக 142 அடி வரையில் நீரை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் ஆணை, அதன்படி 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு சாதனை.
காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழ் நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.
1,560 கோடி ரூபாய் செலவில் காவேரி டெல்டா மேம்பாட்டுத் திட்டம், 1,017 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில், 2,785 ஏரிகள், 359 அணைக்கட்டுகள் மற்றும் 4,539 புள்ளி மூன்று இரண்டு கிலோ மீட்டர் நீர் வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு.
உயர் மற்றும் மேல்நிலைக் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க 89 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு 1,429 கோடியே 9 லட்சம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை, 72,843 ஆசிரியர்கள் மற்றும் 14,711 ஆசிரியர் அல்லாதோர் பணி நியமனம்.
ஆண்டுதோறும் 48 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு விலையில்லா 4 இணை சீருடைகள், ஆண்டுதோறும் 97 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு விலையில்லா புத்தகப் பைகள்.
187 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 48,000 பேருக்கு விலையில்லா கறவை பசுக்கள், 729 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு 22 லட்சம் விலையில்லா ஆடுகள், 6,870 கோடி ரூபாய் செலவில் 1 கோடியே 11 லட்சத்து 57 ஆயிரத்து 125 குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள், – 5,365 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் 21,68,513 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், 4,680 கோடி ரூபாய் செலவில் 2 லட்சத்து 40 ஆயிரம் சூரிய மின்சக்தியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீடுகள், 4,234 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 88 ஆயிரம் வீடுகள், 260 கோடி ரூபாய் செலவில் கைத்தறி நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 2,372 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 11 லட்சத்து 32 ஆயிரம் நபர்களுக்கு சிகிச்சை.
இத்திட்டங்களையும், இன்னும் பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வரும் அ.இ.அ.தி.மு.க. அரசு, அடுத்து வரும் ஆண்டுகளிலும் பார் போற்றும் திட்டங்கள் பலவற்றை மக்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறது என முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
தமது தலைமையிலான கழக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் உயர்விற்கும் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற சாதனைகளை விளக்கியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கழகம் பெற்றிருக்கும் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வரும் 10ம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விபரங்கள் அடங்கிய பட்டியல் கழக நாளேடான “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.” நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள் என்றும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்த பொதுக்கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி மற்றும் ஊராட்சி, கிளை, வார்டு, வட்டங்கள் உட்பட பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் அ.இ.அ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் உயர்விற்கும் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற சாதனைகளை விளக்கியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கழகம் பெற்றிருக்கும் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக பிரச்சாரப் பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவின் ஒப்புதலோடு, பொதுக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை, கழக கொள்கைப்பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை வெளியிட்டுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.