திருச்சி அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கல்யாணகுமார்(வயது 37), இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு சின்னஞ்சிறு வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
கல்யாணகுமார் பொன்மலை ரெயில்வே பணிமனையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால், அவர் சரியாக வேலைக்கு செல்லவில்லை.
மேலும், அவருக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், திருச்சி பொன்மலை ரெயில்வே மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக, சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து கல்யாணகுமாரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் நேற்று காலை பொன்மலை ரெயில்வே அதிகாரிகளிடம் சென்று கல்யாணகுமார் இறந்தது குறித்து தகவல் தெரிவித்தனர்.
மேலும், கல்யாணகுமாரின் மனைவி ரேவதிக்கு வேலை வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு கல்யாணகுமாரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும், இதனால் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை கேட்ட கல்யாணகுமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கல்யாணகுமாரை வேலையில் இருந்து நீக்கிய விபரம் எங்களுக்கு தெரியாது என்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அக்கட்சியினர், கல்யாணகுமாரின் உறவினர்கள் நேற்று மதியம் பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் பணிமனையின் நுழைவு வாயில் முன்பு கல்யாணகுமாரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்யாணகுமாரை வேலையை விட்டு நீக்கி விட்டதால், உங்களது கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்யாணகுமாரின் உடலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பொன்மலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கல்யாணகுமாரை வேலையில் இருந்து நீக்கிய விபரம் கூட தெரியாமல், கணவணின் பிணத்தின் அருகில் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அப்பாவியாய் அமர்ந்திருந்த ரேவதியை பார்க்கும்போது, நெஞ்சம் கனக்கிறது.
மனிதாபிமான அடிப்படையில், ரெயில்வே நிர்வாகம், அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்.
-ஆர்.அருண்கேசவன்.