கேரள மாநிலம் திருச்சூரில், போலீஸ் அகாடமி விழாவில் கலந்து கொள்ள, கடந்த சனிக்கிழமை காலை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா மேடைக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று, அமைச்சருக்கு, ‘சல்யூட்’ அடித்தனர்.
ஆனால், இருக்கையில் அமர்ந்திருந்த கூடுதல் டி.ஜி.பி., ரிஷிராஜ் சிங், எழுந்திருக்காமல் பெண் போலீசாரின் அணிவகுப்பை பார்த்தவண்ணம் இருந்தார். அமைச்சர் வந்தபோது, ரிஷிராஜ் சிங் அமர்ந்த நிலையில் இருந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கூடுதல் டி.ஜி.பி., ரிஷிராஜ் சிங், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். தன் மீதான இந்த குற்றச்சாட்டை, கூடுதல் டி.ஜி.பி., ரிஷிராஜ் சிங் மறுத்துள்ளார்.
மேடையின் பின்புறமிருந்து அமைச்சர் வந்தார். முன்புறம் நடந்த அணிவகுப்பை நான் பார்த்துக் கொண்டிருந்ததால், அமைச்சர் வந்ததை கவனிக்கவில்லை. இவ்விஷயத்தில், நான் தவறேதும் செய்யவில்லை என தெரிவித்தார்.
ஆனால், கூடுதல் டி.ஜி.பி., ரிஷிராஜ் சிங் சொல்வது நம்பும்படியாக இல்லை.
இதுதொடர்பாக, கொச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, திருச்சூர் போலீஸ் அகாடமி விழாவில் நடந்த சம்பவம் குறித்து, யார் மீதும் நான் புகார் சொல்ல வில்லை. மரபு மீறப்பட்டதா? என்பது குறித்து, மாநில டி.ஜி.பி., தான் கண்டறிய வேண்டும் என கூறினார்.
-ஆர்.மார்ஷல்.