டாஸ்மாக் கடையை மூடக்கோரி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட, நல்லூர் கிராமத்தில் உள்ள உண்ணாமலைக் கடை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடை பகுதியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் காந்தியவாதி சசிபெருமாளுடன் இணைந்து போராடி வருகின்றனர். இன்று செல்போன் கோபுரம் மீது ஏறி அமர்ந்து போராடிய சசிபெருமாள் மரணமடைந்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் போராட்டம் தொடங்கிய பொழுது சசிபெருமாள் அங்கிருந்த செல்போன் கோபுரம் மீது ஏறி அமர்ந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார், அவர் மேலே செல்லும் பொழுது பெட்ரோல், தீப்பெட்டி, கயிறு ஆகியவற்றை எடுத்துகொண்டு ஏறியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்நிலைய போலிசார், பேச்சுவார்த்தை நடத்தினர், மதுக்கடையை உடனே மூடவேண்டும் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது.
இந்நிலையில் சம்பவம் இடத்திற்கு வந்த டாஸ்மாக் நிறுவன அதிகாரி, இன்றிலிருந்து 7 நாட்களுக்குள் பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள மதுக்கடையை மூடுவதாக எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளித்தார்.
அதன் பின்னர் சசிபெருமாளை இறக்கிவர, செல்போன் கோபுரம் மீது தீயணைப்பு படையினர் சென்றனர். செல்போன் கோபுரம் மீது 3 மணி நேரம் நின்றதால் சசிபெருமாள் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் ஏற்கனவே கழுத்தில் கயிறு மாட்டி இருந்ததால், கழுத்து பகுதி இறுத்தி மூக்கு வழியாக இரத்தம் வந்துள்ளது. அதன் பிறகு சசிபெருமாள் உடலில் கயிற்றைக்கட்டி தீயணைப்பு படையினர் கீழே இறக்கியுள்ளனர்.
அதன் பிறகு உடனடியாக அவரை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கவனக்குறைவாலும், காலதாமதத்தாலும் அநியாயமாக ஒரு காந்தியவாதியின் உயிர் போய்விட்டது.
-மா.செந்தில்நாதன்.