ஆடிப்பெருக்கு விழாவை, மக்கள் அமர்க்களமாக கொண்டாடினார்கள்!

Photo-0041Photo-0039Photo-0032 Photo-0033 Photo-0034Photo-0038Photo-0042 Photo-0044 Photo-0046

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாளைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில்   புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

முன்பெல்லாம் நதிக்கரையோரம் உள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையும். இந்நாளில் உழவர்கள்  நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். ஆடி மாதத்தில் விதைத்தால் தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால்தான்  “ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற பழமொழியும் இன்றுவரை வழக்கில் இருந்து வருகிறது. அதனால்தான் நதிகளை உழவர்கள் தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து  வழிப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.

ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இன்றுவரை இருந்து வருகிறது.

அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் செய்து அதை ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிட்டு வரும் வழக்கமும் இருந்து வருகிறது.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்குநாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம்.

காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

காவிரி ஆறு செல்லும் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி வேலூர், குளித்தலை, திருச்சி, தஞ்சை, ‌திருவாரூ‌ர்,  நாகை, பூம்புகார் ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கு விழா இ‌ன்று சிற‌ப்பாக  கொண்டாடப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக இன்று நடைப்பெற்றது.

ஆடி‌ப்பெரு‌க்கையொ‌ட்டி கா‌வி‌ரி‌யி‌ல் இ‌ன்று  ஏராளமான புதுமணத்தம்பதிகள் ஆற்றில் புனித நீராடியதோடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தின‌ர்.  இல்லத்தரசிகளும் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்தனர்.

கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டார்கள்.

விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு  மலர்  தூவி வண‌ங்‌கினா‌‌ர்க‌ள். மேட்டூர், ஒகேனக்கல்லில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடியதோடு, மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தின‌ர்.

Photo-0037

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில்  சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டு இருந்தது.

திருச்சியில்  இன்று மாலை 6 மணி முதல் 7 மணிவரை மழை பெய்ததால்  மக்கள் மழையில் நனைந்து கொண்டே  காவிரித்தாயை வழிப்பட்டனர். மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.