பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்பு முறைகேடு: தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

DAYANIDHI MARAN

DAYANIDHI MARANDAYANIDHI MARAN.57

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டி.வி.க்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

SUN_network_office

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் தயாநிதி மாறனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இதனால் தம்மை கைது செய்யாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் 6 வார காலத்துக்கு இடைக்கால முன் ஜாமீன் பெற்றார். அப்போது, விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் சிபிஐ முறையிடலாம் என உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

அதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது. தயாநிதி தரப்பு வாதம் கடந்த இரு வாரங்களாக இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் முன்வைத்த வாதம்: இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மனுதாரர் தயாநிதிமாறனை காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். சன் டிவிக்கு இணைப்பு கொடுத்தாரா என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது.

அதாவது தயாநிதியை 2 காரணங்களுக்காக கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. தயாநிதிமாறன் 1,000 தொலைபேசி இணைப்புகளை முடக்கி அதில் 724 லைன்களை பயன்படுத்தி இருக்கிறார். ஒரு தனிநபர் இத்தனை இணைப்புகளையும் பயன்படுத்தி இருக்க முடியாது. ஆகையால் இதன் மூலம் உண்மையில் ஆதாயம் அடைந்தது யார்? என்பது தெரிய வேண்டும்.

அடுத்ததாக, தயாநிதி மாறனின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது கண்டறிய வேண்டும்.

இந்த 2 காரணங்களுக்காகத்தான் தயாநிதியை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஜி. ராஜகோபாலன் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை  இன்று (10.08.2015) வழங்குவதாக கூறி நீதிபதி வைத்யநாதன் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் 6 வாரங்களுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமீனை, நிரந்தர ஜாமீனாக வழங்க வேண்டும் என தயாநிதிமாறன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று (10.08.2015) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தயாநிதி மாறனின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என தயாநிதி மாறனுக்கு, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.