சீனத் தலைநகரான பெய்ஜிங்கிற்கு, தென்கிழக்கில் அமைந்திருக்கும் தியான்ஜின் பெரிய துறைமுக நகராகும். இங்கு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
கடற்கரை நகரான தியான்ஜினில் இருக்கும் தொழிற்பேடையில், சீன நேரப்படி 12.08.2015 புதன் இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தியான்ஜின் நகரமே தீ பிளம்பாகக் காணப்பட்டது. தியான்ஜின் நகரின் பினாய் மேம்பாட்டு மண்டலத்தில் அபாயகரமான பொருட்களை வைக்கும் சேமிப்பு கிடங்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு 30 வினாடிகளுக்குப் பிறகு, மேலும் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்வு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 100- க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என்றும், 1000-க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து கரும்புகை தொடர்ந்து வான் நோக்கி எழுந்தபடி இருக்கிறது.
இந்த வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் ஏற்றுமதிக்காக தயாராக இருந்த, நூற்றுக்கணக்கான கார்கள் எரிந்து எலும்புக் கூடாகக் கிடக்கிறது.
-ஆர்.மார்ஷல்.