ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சதுரகிரி, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு கோயில்களில், நீர்நிலைகளில் லட்சக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை நாளான இன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைய ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் புகழ்பெற்ற நீர் நிலைகளில் திரண்டு பலரும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். மூதாதையர்களின் இறந்த தினம் தெரியாதவர்கள் இந்நாட்களில் தர்ப்பணம் செய்தால் அது அவர்களை சென்றடையும் என்பது நம்பிக்கை.
இதனால் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் புகழ்பெற்ற நீர் நிலை மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் திரண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளான இன்று 14.08.2015 ராமேசுவரம் உள்ளிட்ட புனித நீராடும் தலங்களில் ஏராளமான பக்தர்கள் காலையிலேயே குவிந்தனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை 6 மணி அளவில் தங்க கருட வாகனத்தில் ராமர் புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தர்ப்பணம் கொடுத்தனர்.
அதேபோல் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றாங்கரையில் பக்தர்கள் நீராடி தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தர்ப்பணம் கொடுத்தனர்.
-கே.பி.சுகுமார்.