திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கீழமுல்லக்குடி கிராமத்திற்கு அருகே, திருச்சி-கல்லணை சாலையில், காவிரி ஆற்றுக்கரையில் சாலை ஓரத்தில் ஆடுகள் மேய்வது வழக்கம்.
உள்ளுர் பகுதி என்பதால் ஆடுகளின் அருகில் ஆட்டின் உரிமையாளர்கள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், ஏதாவது மரத்தடியில் உட்கார்ந்து இருப்பார்கள். இதனால் அப்பகுதியில் அடிக்கடி ஆடுகள் காணாமல்போவது தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (17.08.2015) மாலை 5 மணியளவில் சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடு ஒன்றை மோட்டார் பைக்கில் வந்த இருவர், கண் இமைக்கும் நேரத்தில் தூக்கி சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், மோட்டார் பைக்கில் துரத்தி சென்று, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை அருகே ஆடு திருடி சென்றவர்களை மடக்கிப்பிடித்தனர்.
அதன் பிறகு அவர்களை கீழமுல்லக்குடி கிராமத்திற்கு அழைத்து வந்தனர். பிறகு திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலிசார், அந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆடு திருடிய நபர்கள் இருவரும், திருச்சி, காஜாமலை பகுதியை சேர்ந்த செபஸ்டின் என்பவரின் மகன் அந்தோணிதாஸ், திருச்சி, நவல்பட்டு, போலிஸ் காலனியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் அழகேசன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 2 செல்போன்களையும், ஒரு மோட்டார் பைக்கையும், காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
-கே.பி.சுகுமார்.