தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏற்காடானது குறிப்பிடதக்க இடத்தில் உள்ளது. இங்கு விடுமுறை தினம் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து ஏற்காட்டின் எழிலை கண்டு ரசிக்கின்றனர்.
இங்கு சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி செல்லும் இடங்களில் முதன்மையாக இருப்பது ஏற்காடு படகு இல்ல ஏரியாகும். இங்கு சுற்றுலா பயணிகள் ஆனந்த படகு சவாரி செய்து மகிழ்வர்.
இந்த ஏரி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியை சுற்றுலா வளர்ச்சி கழகத்தினரே பராமரிக்க வேண்டும். படகு இல்லத்திற்குள் நுழைவதற்கென ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், இங்கு மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு என மூன்று வகை படகுகள் உள்ளன. படகு சவாரி செய்ய மிதி படகிற்கு ரூ. 120, துடுப்பு படகிற்கு ரூ.150 , மேலும், மோட்டார் படகிற்கு ரூ.350 என வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏற்காடு படகு இல்லத்திற்கு மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கிறது.
இத்தகைய வருமானம் கிடைக்க கூடிய படகு இல்ல ஏரியில், ஆகாய தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் குறைந்த அளவிலான இடங்களிலேயே படகு சவாரி செய்ய முடிகிறது.
மேலும், படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள், ஆகாய தாமரைகளின் துர்நாற்றத்தால் முகம் சுழிக்கின்றனர். மூக்கை மூடிக்கொண்டுதான் படகு சவாரி செய்கின்றனர்.
இந்த ஆகாய தாமரைகளை அகற்ற, சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால், வருடந்தோறும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். குத்தகைக்கு எடுத்தவர்கள், சுற்றுலா வளர்ச்சி கழகத்தினரின் மேற்பார்வையில், ஆகாய தாமரைகளை அகற்றுவர்.
ஆனால், இந்த ஆண்டு ஆகாய தாமரை அகற்ற யாருக்கும் குத்தகைக்கு விடாத நிலையில், ஏரி முழுவதும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது.
இந்த ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, ஏரியின் எழிலை காப்பாற்ற சுற்றுலா வளர்ச்சி கழகம் முயற்சி எடுக்குமா?
-நவீன்குமார்.